பிரின்ஸ் மிஷ்கின்

தாஸ்தாவஸ்கியை பற்றி நண்பர்களுடன் உரையாடிய இரவு, அகம் மகிழ்ச்சியையும் கொந்தளிப்பையும் மாறி மாறி அடைந்ததால் உறக்கம் தொலைந்தது.தாஸ்தாவஸ்கியின் பல கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக வசந்த கால இலைகள் போல் தன்னகத்தே தோன்றி இலையுதிர் கால இலைகள் போல் வண்ணம் பெற்று உதிர்ந்தன.

இருக்கும் பொருட்கள் அனைத்தும் இல்லாத ஒரு பொருளை நினைவுப்படுத்தும் என்றால் இருக்கும் பொருளின் பொருள் தான் என்ன? இருப்பில் இருந்து இல்லாமைக்கு செல்லும் பயணம் இருள் நிரம்பியது என்றால் , அதன் பாதையில் ஒற்றை மெழுகுவர்த்தியுடன் முன்னே நடந்து செல்பவன் தாஸ்தாவஸ்கியா அல்லது அசடன் மிஷ்கினா?

அகம் உந்தப்பட்டு தாஸ்தாவஸ்கியின் புத்தகத்தை வாசிக்கலாம் என்றமர்ந்தால் எதை வாசிப்பது என்ற குழப்பம்.  சரி குற்றமும் தண்டனையும் வாசிக்கலாம் என்றால் மூன்று மாதம் முன்புதான் அதை வாசித்திருந்தேன். தாஸ்தாவஸ்கியின்  புத்தகத்தை வாசிக்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது, ஏனென்றால் அப்போதுதான்  திருச்செந்தாழையின் புத்தகத்தை வாசிக்க தொடங்கியிருந்தேன். திருச்செந்தாழையின் கவித்துவமான வரிகள் சில கணங்களில் கிழக்கில் தோன்றி இவ்வுலகத்திற்கே ஒளி அருளி மேற்கில் மறையும் எழுத்து, சில கணங்களில் தன்னில் தொடங்கி தன்னில் வளர்ந்து தன்னிலே மறையும் நிழல். ஒரே நேரத்தில் இரண்டு புத்தகங்களை முன்னர் வாசித்திருந்தாலும் இரு பெரும் யானைகளை ஒரே நேரந்தில் சுமக்கும் மனநிலை இல்லாததால் சிறிது தயக்கத்துடன் இருந்தேன்.




பின்பு ஒரு நாள் சட்டென ஓர் தெளிவு. The Idiot வாசிக்க வேண்டும் என்று. இரு காரணங்கள். முதல் காரணம் , ஜெயமோகன் தளத்தில் வாசித்த கபிலரின் பாட்டு. காந்தள் மலர்ப்புதரின் அடியில் நிற்கும் பசுவின் மேல் மலரும் பொடியும் பொழிந்து வண்ணப்போர்வையாய் பசுவின் மேல் விரிய , பசு நிறம் மாறி அதன் கன்றுக்கே திகைப்பை உண்டாக்கியதாக பாடல். இளமையில் நான் ‘The Idiot’ ஆகதான் இருந்தேன். இந்த வாழ்க்கையும், சுற்றமும், வேலையும் மற்றும் அனுபவத்தால் அடைந்த அறிவும் பாலை மலர்களாக வெடித்து என் வண்ணம் மாறி எங்கிருந்தோ இங்கு வந்து சேர்ந்து விட்டேன். கன்று திகைத்தது போல் என்னை கண்டு நானே திகைப்புற்ற தருணம். ஒருபோதும் என்னால் அங்கு திரும்பி செல்ல  முடியாது. நினைவுகள் அழிந்து மனம் பிறழ்ந்தால் ஒருவேளை சாத்தியமாகலாம்.அது விரைவில் நடக்காதென்பதால் The Idiot வாசித்து மிஷ்கினாக சில நாட்கள் உருமாறலாம் என்பது முதல் காரணம்.

இரண்டாவது , பால் சக்காரியாவின் யேசு கதைகள் புத்தகம். இந்த புத்தகம் சமீபத்தில் கையில் கிடைத்தது. புத்தகத்தை கையில் வாங்கி திறக்கும் முன்னே மனதில் இன்றிரவே  'The Idiot' வாசிக்க தொடங்கிவிட வேண்டும் என்று முடிவுசெய்து தொடங்கி விட்டேன்.




'The idiot' வாசிக்க வாசிக்க இரு உலகங்களில் வசிக்கும் ஓர் உணர்வு.ஒவ்வொரு முறை வாசித்து புத்தகத்தை மூடும்போதும்  பிரின்ஸ் மிஷ்கினின் உலகத்தில் இருந்து வெளியே வந்தேயாகவேண்டிய கட்டாயம். காரணம் எளிது. பிரின்ஸ் மிஷ்கினாக இந்த உலகத்தில் வாழ்வது கடினம். மேலும் வாசிக்க வாசிக்க இதுவரை நான் கண்ட பிரின்ஸ் மிஷ்கின்களையும் மற்றும் பிரின்ஸ் மிஷ்கினிய தருணங்களையும் எண்ணி எண்ணி ஓர் நெகிழ்ச்சி.

அன்று அலுவலகம் செல்ல வேண்டிய நாள். வீட்டில் இருந்தே வேலை பார்த்து கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அலுவலகம் செல்கிறேன். குளிர்ந்த மெல்மர்ன் காலை. முந்தைய இரவு முழுவதும் மழை என்று நினைக்கிறேன். ரோட்டில் தேங்கியிருந்த நீரில் முகம் பார்த்து கொண்டே நடந்தேன். ஒவ்வொரு முறை ஒவ்வொரு முகம் தெரிந்தது. கையில் வெப்பம் பரவ காபி ஒன்றை வாங்கி தொடர் வண்டி ஏறினேன். கோடை காலத்தில் தொடர்வண்டி ஏறினால் சக பயணிகளை கவனிப்பேன். கோடை காலம் எல்லோர் மனதிலும் ஓர் அருவியை உற்பத்தி செய்கிறதாக கற்பனை. கற்பனைக்கு காரணம் அறியேன். குளிர் காலத்தில் மனிதர்களை காண பிடிப்பதில்லை. பெரும்பாலானவர்களின் குளிராடை ஒரேமாதிரியான சலிப்பூட்டும் கருப்பு நிறத்திலேயே இருப்பது கூட காரணமாயிருக்கலாம். ஆனால் வெளியில் மரங்கள் நிறம் கொண்டுள்ளன. அதனால் ஜன்னல் இருக்கையே விருப்பம். எவரும் பேசி விடுவார்கள் என்று பாடலே இல்லாமல் வெறும் headphones அணிந்திருப்பேன். அப்படியான காலை பயணத்தில் என் எதிர் இருக்கையில் இரு பெண்கள். ஒருவர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை புரியாத சொற்களை காற்றில் எழுதி கவிதை புனைந்தபடி, மற்றொருவர் அந்த கவிதையை கிழித்து எறிவது போல் ‘ssh, ssh , silence’ என மிக அன்பாக கூறிக்கொண்டு வந்தார். கிழித்து எறிவதுபோல் எப்படி அன்பாக? சொல்லில் அன்பும் கண்ணில் கூர்மையும் கண்டதால் எனக்கு அப்படி தோன்றியதோ என்னவோ. ஓர் 15 நிமிடம் கவிதையாக தோன்றிய மொழி பிறகு எரிச்சலை தந்தது. நான் மனிதன்தான் என்பதை பல தருணங்கள் எனக்கு உணர்த்துவதுண்டு. எரிச்சல் அடைந்தது அப்படி ஓர் தருணம். இடம் மாறி உட்கார்ந்து விடலாமா? நம்மை ஏதேனும் திட்டி  தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி விடுவாளா? இவள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விட மாட்டாளா? இவள் ஏன் இப்படி ஆனாள்? நிறைய புத்தகங்கள் வாசித்திருப்பாளோ? இவளுக்கு இரவில் கனவு வருமா? இவள் கனவில் வருபவர்கள் இவளிடம் அன்பாக பேசுவார்களா? என்ன மொழி பேசுவார்கள்? என பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் , அமைதியாக காபியுடன் கழிக்க வேண்டிய ஓர் காலை பயணத்தை, அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைந்த வாய்ப்பை கெடுத்து விட்டாளே என்ற கோபம்தான் மேலேறி வந்தது. அப்போது எங்கிருந்தோ வேகமாக கையில் பெரிய பையுடன் வந்தவன் என்மேல் மோத கையிலிருந்த காபி போப்பை தவறி கீழே விழுந்தது. இடித்தவனுக்கு என்ன அவசரமோ ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டான். பிறகு காற்றில் மறுபடியும் அந்த கவிதை மொழி, ‘ooh,I am so sorry for what he did’…..

Captain Sally திரைப்படம். ஹட்சன் நதியில் பழுதான விமானத்தை பயணிகளுடன் நீரில் இறக்கி அனைத்து பயணிகளையும் காப்பாற்றிய விமானியின் கதை. என் மகனுடன் பார்த்துக்கொண்டிருத்தேன். விமானி தரையிரக்கியதும் நான் உற்சாகமாக கைதட்டி , ‘ பார்த்தாயா, விமானி எவ்வளவு திறமைசாலி , ஒரு பயணியும் இறக்கவில்லை’ என்று என் மகனிடம் கூறினேன். மிக அழுத்தமாக என்னை பார்த்து விட்டு , ‘I am so sad, what would have happened to all the fishes in the river?’ என்றான்….

'Don Quixote' புத்தகம் 'special textile edition' தேடிக்கொண்டிருந்தேன். மூன்று நான்கு மாதங்கள் அலைந்து கிட்டத்தட்ட நாற்பது கடைகளில் தேடி பிறகு அந்த புத்தகத்தை வாங்கினேன். அடுத்த நாள் அலுவலக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மதிய உணவுக்கு சென்றோம். தன்னுடைய இரண்டாவது 'Investment property' பற்றி ஒரு நண்பர், தான் வாங்கிய 'crypto currency' பற்றி ஒரு நண்பர், தன்னுடைய 'car' பற்றி ஒரு நண்பர், தன்னுடைய 'PS5 game console' பற்றி ஒரு நண்பர் என அவர்கள் வாங்கிய பொருட்களால் அடைந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நான் அலைந்து வாங்கிய 'Don Quixote' புத்தகமே எனது மகிழ்ச்சி என என்னால் பகிர முடியவில்லை. ஏற்கெனவே புத்தகத்தை பற்றி பேசி பலரது சிரிப்புக்குள்ளான அனுபவம். தீப்பற்றி எரியும் தீவில் திசையறியா பறவையாய் சிறகடித்தலின் பரபரப்பை உணராத கூட்டத்தின் நடுவே தனியனாய் உணர்ந்த தருணம்..





காலையில் மலை உச்சிக்கு சென்று நிற்பதில் ஓர் நிறைவு. அப்படி நான் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேர கார் பயணத்தில் ஒரு மலை. மலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறைந்தது 100 கிளிகள் ஒன்றாக கூடும். அன்று ஒரு காலை கிளிகள் கூடிய  வேளையில் நான் அங்கு இருந்தேன். கிளிகள் மிக தீவிரமாக கூடி அமர்ந்து சில மணித்துளிகள் பாடின. 100 கிளிகள் ஒரே நேரத்தில் பாடியும் ஒவ்வொரு கிளியின் குரலும் தனியாக அந்த பனிபொழியும் காலையின் நிசப்தத்தில் துல்லியமாக கேட்டது. ஒரே நேரத்தில் பெரும் கூட்டத்தின் மொத்த ஒலியும், கூட்டத்தின் தனி ஒலிகளும் துல்லியமாக கேட்ட அனுபவம் இரண்டு. ஒன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, இரண்டு இந்த கிளி கூட்டத்தின் பாடல். பாடல் முடிந்து அனைத்து கிளிகளும் ஒரே நொடியில் சிறகை விரித்து பறந்தன. அதை கண்டது வாழ்வின் மறக்க முடியாத தருணம். 100 கிளிகள் ஒன்றாக பறந்தும் ஒரு கிளிக்கூட மற்ற கிளியுடன் தெரியாமல் கூட மோதாமல் பறந்து மறைந்தது..





'Brighton beach' தான் எப்போதும் நடைப்பயிற்சிக்கு செல்லும் இடம். 'Brighton beach' நடை எப்போதும் வாசித்த கவிதைகளை எல்லாம் நினைவில் கொண்டுவரும். அலையா?, கடலா? , கரையா ?, கரையில் இருக்கும் பெரிய கல்லா? அல்லது கல்பொரும்சிறுநுரைகளா? எது வாசித்த கவிதையை நினைவுபடுத்துகிறது என்று தெரியவில்லை. அப்படி ஓர் பெரிய கல் அசடன் மிஷ்கினை நினைவுபடுத்தியது. தன்னில் சீற்றத்தோடு மோதும் அலைகளை எதிர்கொண்டு, மோதும் வரை இறுக்கமான முகம் கொண்ட அலைகளை மோதியவுடன் மலர்ந்த நுரைகளாக மாற்றும் கல். ஒவ்வொரு மோதலிலும் அலையை நுரையாக மாற்ற தன்னில் சிறு துளியை மிக அமைதியாக கரைக்கும் கல்.





அன்று பூங்காவில் நடை. இலையுதிர் காரணம் என்பதால் மரங்கள் பூமிக்கு வலிக்காத வண்ணம் இலைகளை உதிர்த்து கொண்டிருந்தன. உதிரும் இலையை காணும் எவருக்கும் தத்துவ சிந்தனை நொடிப்பொழுதில் வந்தே தீரும். All absurd cliches. அதை எண்ணி நகைத்தப்படி நடந்துகொண்டிருந்தேன். அப்போது உதிர்ந்த ஓர் இலை தரை நோக்கி பயணித்தது. அந்த பயணத்தில் ஓர் தவிப்பு. முன்னமே உதிர்ந்து தரையில் கிடந்த இன்னொரு இலை மேல் சரியாக விழுவதுபோல் அதன் போக்கு. அதனால் அந்த தவிப்பு. கடைசி நொடியில் சிறு தென்றல் அதன் போக்கை மாற்ற இலை சற்று தள்ளி விழுந்தது. அந்த சிறு மென்காற்றிலும், இலையிலும் மிஷ்கினின் முகம் அரை நொடி மின்னி மறைந்தது.




 தமிழ் சங்க இலக்கிய பாடல்களின் உச்சம்  கவிதை, கவிதையின் சொல்லப்படாத சொல் மிஷ்கின். பறவையின் உச்சம் விசும்பு. விசும்பின் துளி மிஷ்கின். அறிவின் உச்சம் மனப்பிறழ்வு, மனப்பிறழ்வின் ஒரு வண்ணம் மிஷ்கின். நிம்மதியின் உச்சம் மறதி, மறதியின் கடைசி நினைவு மிஷ்கின். போதையின் உச்சம் தன்னையிளத்தல், தன்னை இழந்ததன் தெளிவு மிஷ்கின்.

தூய அன்பை எதிர்கொள்வது கடினம். அதுவும் அந்த அன்பிற்கு தான் தகுதியற்றவன் என்ற எண்ணம் கொண்டவனுக்கு அது இன்னும் கடினம். உள்ளொடுங்கி எவரும் வேண்டாம் என்று அமர்கையில் அருகில் வந்து அமரும் நண்பனாக இந்த புத்தகம் வாசித்த ஒரு மாதமும் மிஷ்கின் இருந்திருக்கிறான்.தூண்டிலில் சிக்கி தோல் பையில் நீந்தும் மீனின் கடைசி நம்பிக்கையை எழுதிய கவிஞன் பிரான்சிஸ் கிருபா, இனிமேல் பயனில்லை என தூக்கி எறியப்பட்ட காலனியை கண்டு வாஞ்சையுடன் வரைந்த van gogh என இன்னும் இன்னும் மிஷ்கினை நினைவுப்படுத்தாத தருணங்களே இல்லை என்றளவிற்கு மிஷ்கின்கள் சூழ் உலகாக என் உலகம் மாறியதிற்கு ‘The idiot’  ஒன்றே காரணம். Dostoevsky is my eternal friend.

Comments