2008:
முதன்முதலில் சித்தார்த்தா புத்தகத்தை 2008-இல் வாசித்ததாக என் goodreads app சொல்கிறது. இப்படி என் பழைய குறிப்பில் எழுதி தொடங்கியிருக்கிறேன்.
‘அலைந்து அலைந்து தொலைந்து விட வேண்டும், சித்தார்த்தனை போல.
கலைந்து தொலைந்து மீண்டும் பிறந்துவிட வேண்டும், புத்தனைப்போல’.
கவிதை எழுத முயற்சி செய்திருக்கிறேன் போல. கேவலமாக இருக்கிறது. சிரிப்பாக வருகிறது. அபத்தங்களும் அற்புதங்களும் நிறைந்ததுதானே கடந்த காலம். என்ன செய்ய? அன்று Herman Hesse-இன் சித்தார்த்தா புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசித்தேன். அவரின் ஜெர்மன் மொழி கவிதைபோல் இனிமையாகயிருக்கும் என்று நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அந்த கவித்துவத்தை ஒரளவிற்கு கொண்டு வந்திருப்பவர் Susan bernofsky என்ற பரிந்துரையில் அவர் மொழிபெயர்ப்பை வாசித்தேன்.
அன்று அந்த புத்தகம் என்னை என்ன செய்தது என சிந்தித்துக்கொண்டிருந்தேன். என் பழைய குறிப்பையும் வாசித்துக்கொண்டிருந்தேன். பல நினைவுகள். இந்த புத்தகம் வாசித்த காலத்தில் பெங்களூரில் இருந்தேன். குளிர்ந்த பனி படர்ந்த காலைகளும், அடர்ந்த இருட்டுக்குள் இருபது தெரு நாய்கள் சூழ பயந்து பயந்து அடியெடுத்து வைத்து வீடு வந்து சேர்ந்த இரவுகளும் என வேலை கழுத்தை நெரித்த காலம். அன்று புத்தகத்தை முழுமையாக உள்வாங்கினேனா என்றுகூட தெரியவில்லை. ஆனால் புத்தகம் என்னை ஈர்த்தது. பல காரணங்களில் இரண்டு
1. முக்கியமாக புத்தருடன் சித்தார்த்தா பேசியது. எவ்வளவு தன்னம்பிக்கை, திமிர் மற்றும் ஞானச்செருக்கிருந்தால் அப்படி சித்தார்த்தனால் புத்தரிடமே பேச முடியும். எத்தனை பேர் புத்தரிடம் எனக்கு ஞானத்தை அருளென வந்திருப்பார்கள். புத்தருக்கு அது பாரமாகதானே இருந்திருக்கும். அப்படியிருக்க ஒருவன் உன் ஞானம் எனக்கு வேண்டாமென சொல்வது புத்தரின் பாரத்தை சிறிது குறைப்பதுபோலதானே. புத்தருக்கே விடுதலையளித்தவன் சித்தார்த்தன். அவன்போலதான் நானும் என்ற அசட்டு கண்மூடித்தனமான அந்த வயதிற்குரிய எண்ணம் இருந்ததால் புத்தகம் மனதிற்கு நெருக்கமாக இருந்தது.
2. உண்மையிலேயே ஒவ்வொரு சனிக்கிழமை இரவில் நான்காவது ரவுண்டில் எனக்கு கிடைத்த ஞானம் சித்தார்த்தனுக்கு புத்தருடன் சண்டையிட்டபின் கிடைத்தாக தோன்றியது. அப்படியென்றால் நான் சித்தார்த்தனைவிட ஞானம் பொருந்தியவன் என எண்ணிக்கொண்டேன். வெறும் தன்னையறிய வேண்டிய பயணத்தில் தன்னையே ஒருவன் இழந்ததை உணருவதையும், ஆற்றில் மூழ்கையில் ஓம் என்ற ஒற்றை சொல் மனதில் ஒழித்ததால் ஞானம் பெறுவதையும் படிக்கையில் ஞானம் அவ்வளவு எளிதாக கிடைக்க கூடிய ஓன்றா என எண்ணினேன். சித்தார்த்தன் அலைந்து திரிந்து monk ஆக இருந்து பெற்ற ஞானத்தை நமக்கு ஒரு monk அதுவும் பழைய monk அளித்துவிட்டதே என்ற அலட்சியம். அப்படி என்னை உயர உணர செய்ததாலும் புத்தகம் பிடித்திருந்தது.
2024:
இன்று சித்தார்த்தனை வாசிக்கையில் அவ்வளவு ஈர்ப்பாகயில்லை. காரணம் என்னவாகயிருக்கும் என்று யோசித்தேன். அன்று இருந்த இடத்திலிருந்து முன்னோக்கி வந்து விட்டேனா?, பின்னோக்கி சென்றிருக்கிறேனா?, அங்கேயே அவ்விடத்திலேயே நின்று வேறோர் திசை பார்த்து அமர்ந்திருக்கிறேனா? இல்லை இங்கெல்லாமே வட்டம்தானா? வட்டத்தில் தலை சுற்ற சுற்ற ஓடிக்கொண்டிருக்கிறேனா? தெரியவில்லை. ஆனால் புத்தகம் வாசிக்கையில் அன்று பெற்றதை மனம் இன்று பெறவில்லை. பல காரணங்களில் இரண்டு
1. அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் நடிகை பிரியங்கா சோப்ராவை ஒரு பேட்டி காண்கிறார். கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம். இரண்டு நிமிடங்களுக்கு அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் முதன்முறையாக துணையதிபராக பொறுப்பேற்றிருக்கிறார். அமெரிக்கா இதை ஒரு வரலாற்று தருணம் என பார்க்கிறது. வரலாற்றில் இதோர் முக்கிய தருணம் என்றெல்லாம் சொல்லி பெருமையடித்து ஒருவித கர்வத்துடன் பிரியங்கா சோப்ராவிடம் இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கிறார். பிரியங்கா சோப்ரா மிக சாதாரணமாக அலட்டிக்கொள்ளாமல், உங்களுக்குதான் இது புதிது. எங்கள் நாட்டில் ஐம்பது வருடங்களுக்கு முன்பே ஒரு பெண் பிரதமராக இருந்திருக்கிறார் என்றார். மேற்குலக மனிதர்களுக்கு பெரியதாக தெரியும் ஒன்று நமக்கு வாழ்வோடு இழைந்த ஒன்றாக இருப்பது ஒன்றும் புதிதல்ல. அதுபோல, கீழைத்தேய நாடுகளில் ஆன்மீகம் என்பது நம் வேர்தானே. நம் தாத்தா, பாட்டி, ஞானிகள், எழுத்தாளர்கள் சொல்லிக்கொடுக்காத ஒன்றை புதிதாக நம் தத்துவ சிந்தனையின் ஆழமறியாத ஒருவர் சொல்வதுபோல்தான் தோன்றியது இப்புத்தகம் வாசிக்கையில். Herman Hesse மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எல்லா எழுத்தாளர்களையும் நான் நேசிக்கிறேன் ஆனால் அய்யா, எங்களுக்கு தோசையை கையால் நான்கு சட்னியுடன் பிசைந்து சாப்பிட தெரியும் நீங்கள் தோசையை ஸ்பூனில் சாப்பிட எங்களுக்கு கற்றுக்கொடுத்தால் எங்களுக்கு கொஞ்சம் அந்நியமாகதான் இருக்கும். அதனால்தானோ என்னவோ எனக்கு இந்த புத்தகம் கொஞ்சம் ஆழம் குறைவாகவும் மேலோட்டமாகவும் பட்டது.
2. தன்னையிழந்து, தன் உறவு, நண்பர்கள் என தன்சுற்றத்தை இழந்த ஞானமடைவது ஒரு வழி. அவ்வழி உவப்பானதாக ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. இன்று அப்படியில்லை. தீவிரமாக இயங்கும் ஒருவர் மலையுச்சியில் நீண்டு வளர்ந்த மரங்களை கண்டவுடன் குழந்தைபோல் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு ஓடி ஓடி அம்மரங்களை கட்டிதழுவி இன்பமடைவதை காணும்போதும், வளரவே வளராது என்று நான் எண்ணிய காய்ந்துபோயிருந்த என் மேசை செடியிலிருந்து இளம்பச்சை நிறத்தில் கருவில் கைகால் மடக்கி உறங்கும் சிசு போல் முளைத்திருக்கும் மொட்டை காணும்போதும், ஒரு மிதிபட்டால் இறந்துவிடும் எறும்பு தன் எடையைவிட பலமடங்கு கனமான உணவை அவ்வளவு வேகமாக உலகையே வெல்லும் முனைப்புடன் தூக்கி போவதை காணும்போதும் மனதில் தோன்றும் சிறு ஒளிக்கீற்று ஞானம்தானே. இதுபோன்ற வாழ்வின் சின்ன சின்ன ஞானங்கள் போதுமென்ற மனநிலை வந்துவிட்டதால் சித்தார்த்தனின் ஆரம்பகால கடினமான ஞானத்தேடல் பயணம் மனதிற்கு ஒட்டவில்லை என நினைக்கிறேன். ஞானத்திற்காக கடினமான பாதையை தேர்வு செய்பவர்கள் மேல் மரியாதை உள்ளதே தவிர அப்பாதைமேல் உவப்பில்லை. சித்தார்த்தனின் பயணம் இப்புத்தகத்தின் கரு. அதில் முக்கியமானது அவனது ஆரம்பகால கடினமான பயணம். அதில் மனம் ஒட்டாததாலும் புத்தகம் நெருக்கமாக இல்லை.
எங்கெங்கோ சிந்தனை சென்று எதை எதையோ யோசித்து கல்லெறிந்த குளம்போல் மனம் இருக்கையில் இப்புத்தகம் சிந்திக்க வைத்ததை எல்லாம் சில சொற்களால் எனக்காக என் தெளிவுக்காக இப்படி எழுதி வைத்துக் கொள்கிறேன். பதினாக்கு வருடங்களுக்குப்பின் முதற்வாசிப்பின் குறிப்பை இன்று படித்ததுபோல், இன்னும் இருபது வருடங்கள் கழித்து இதை வாசித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன்.
புறப்படுதல்:
இந்த புத்தகம் முழுவதும் சித்தார்த்தன் எங்கிருந்தோ புறப்பட்டுக்கொண்டே இருக்கிறான். வீட்டிலிருந்து, துறவிலிருந்து, புத்தரிடமிருந்து, கமலாவிடமிருந்து, காமத்திடமிருந்து, பணத்திடமிருந்து, குழந்தைத்தனமான மனிதர்கள் என அவன் எண்ணுபவர்களிடமிருந்து என சித்தார்த்தனின் புறப்பாடு ஒரு முக்கிய இழையாக புத்தகம் முழுவதும் பின்னப்பட்டுள்ளது. புறப்பாடு ஒருவருக்கு எப்போதும் அலைச்சல்தான் என எனக்கு தோன்றுகிறது . இவ்வகையான புறப்பாடுகள் சோர்வையளிப்பவை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், இப்புறப்பாடுகள் இலக்கற்றவை. அப்படியே இலக்கிருந்துதாலும் குறிப்பிட்ட காலத்துக்குள் இவ்விலக்கை அடைந்துவிடுவேன் என வரையறுத்துக்கூற முடியாதவை. வீடு, உறவு, குடும்பம் என இவற்றிடமிருந்து புறப்படுதல் இறுதிகட்டமென தோன்றுகிறது. முதற்கட்டமாக ஒருவன் தன்னிலிருந்து வேறொரு தன்னை நோக்கி புறப்பட வேண்டும். அலைச்சல் தனக்குறியதா என கண்டறிய வேண்டும். உதாரணத்திற்கு நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் என் மனைவியிடம் சொல்வதுண்டு, என் வாழ்வின் இலட்சியமே இமயமலைக்குச் சென்று அங்கேயே அலைந்து திரிந்து அப்படியே ஞானியாகி விடுவேனென்று. அது அவ்வளவு எளிதென எண்ணியிருந்தேன். பின்பு, ஒரு கணொளி கண்டேன். ‘ஜன்ஸ்கர்’ என்ற ஊரிலுள்ள புத்த மடத்தில் வாழும் ஒரு பிட்சுவின் சிலநாள் வாழ்வு. அவர்கள் வாழ்வு மிக மெதுவாக நகர்கிறது. அவர்கள் இரண்டு வேலைதான் செய்கிறார்கள். மடத்திலிருந்து இறங்கி மலைஎருதுகளின் பால் வாங்கி வருகிறார்கள். பின்பு கஞ்சிபோன்ற உணவு சமைக்கிறார்கள். இதை ஒருநாள் விடாமல் செய்துக்கொண்டேயிருக்கிறார்கள். இதை ஒருமணி நேரம் திரும்ப திரும்ப காட்டுகிறார்கள். எனக்கு அப்படி ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்தால் பைத்தியம் பிடித்துவிடும். அமைதியை நோக்கி செல்கிறோம் ஆனால் அந்த அமைதியே பாரமாகிவிடாது என என்ன நிச்சயம். பிராபபிலிடி படி 50%-50% தானே. அப்போது புரிந்தது. ஞானமான்றால் என் மனதில் ஒரு பிம்பமிருக்கிறது. உண்மையில் அப்பிம்பம் அப்படியே இருக்குமென்று சொல்ல முடியாது. நாம் அனைவரும் தினம் தினம் எதிலிருந்தோ புறப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். நானும் என்னிலிருந்து வேறொரு வடிவமாயிருக்கின்ற என்னைத்தேடிதான் புறப்பட்டிருக்கிறேன் ஆனால் அப்புறப்பாடில் எனக்கு உறவுகளையும் நண்பர்களையும் இழக்கும் எண்ணம் துளியுமில்லை.
பயணம்:
இதை கருவி மற்றும் களம் என பிரித்து புரிந்துக்கொண்டேன். புத்தகம், சக மனிதர்கள், ஆன்மீகம், தேடல், அறிவு என்னபவையெல்லாம் கருவி. வாழ்வு என்பது களம். வெறும் கருவிகளை மட்டுமே துய்ப்பது பயணமல்ல. வெறும் களத்தில் நின்றாடுவது மட்டுமேகூட பயணமல்ல. இவை சரியான அளவில் கலந்திருக்க வேண்டுமென தோன்றியது. உதாரணமாக, புத்தரை சரியான கருவியாக கொண்டிருந்தால் சித்தார்ததன் சிறிது அலைச்சலை தவிர்த்திருக்கலாம். ஆனால், ‘if and buts looks good in hindsight’ தானே. அது சித்தார்த்தனின் தேர்வு. புத்தகம் வாசிக்கையில் எனக்கு தோன்றியதெல்லாம் ஒருவர் எதை பெற வேண்டும் எதை இழக்க வேண்டும் என்பதை அவரவர் தான் முடிவுசெய்ய வேண்டும். ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானது. அப்பயணத்தை அவரே தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாமென கருத்துச்சொல்ல எவருக்கும் உரிமையில்லை. உன் நல்லதுக்குதான் சொல்கிறேன் என கூறிக்கொண்டு வருபவர்களுக்குக்கூட. அவ்வகையில் சித்தார்த்தனின் பயணத்தை ஓரு வாசிப்பாளன் என்றளவில் நின்று பார்த்து வெளியேறிவிட்டேன். அது சரியா தவறா? தேவையா தேவையற்றதா? பயனுள்ளதா பயனற்றதா? என்ற எந்த கருந்தும் இல்லை. பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். இலக்கு முக்கியமல்ல பயணம்தான் முக்கியமென்று. இதுவே என் கருத்தில் ஒரு ‘privileged statement’ தான். நல்ல பணக்காரர்கள் வாழ்வில் பணம் முக்கியமல்ல என தத்துவம் பேசுவதுபோலதான். பயணம் முக்கியம்தான் அதேயளவு இலக்கும் முக்கியம். இலக்கு விரிவடையலாம், மாறலாம், அழியலாம், பயனற்றதாய் இருக்கலாம், மற்றவர் கண்களுக்கு அபத்தமாயிருக்கலாம் ஆனால் இலக்கு என்று ஒன்று தேவை. அடையவே முடியாத ஒன்றாகயிருந்தாலும் இலக்கு தேவை. எதுவாக இருந்தாலும் நம் இலக்கை நாமே தேர்வுசெய்து பயணத்தை தொடரலாம். இதை முக்கியமாக எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
அலைச்சல்:
J.R.R.Tolkien இன் புகழ்பெற்ற வரி ஒன்றுண்டு. ‘Not all those who wander are lost’. பல நேரங்களில் பல கோணங்களில் இந்த வரி எனக்கு மனதிற்கு மிக நெருக்கமான வரி. மனம் எங்கு அலைந்தாலும் பயமில்லாமல் அலையவிடுவதற்கு இவ்வரி எனக்கு உதவியிருக்கிறது. எங்கு அலைந்தாலும் தொலையாமல் மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையளித்த வரி. சித்தார்த்தனின் அலைச்சல் மிக ஆழமாக எழுதப்படவில்லை என்பது என் கருத்து. இன்னும் ஆழமாக எழுதக்கூடிய கதைகளம் அமைந்தும் சித்தார்த்தனின் அலைச்சல் மேலோட்டமாக எழுதப்பட்டதாக தோன்றியது. கமலாவிடம் காமத்தில் அலையும் மனமும், வணிகருடன் வணிகம் கற்றுக்கொள்ளும் மனமும், பின்பு அவற்றை உதரும் மனமும், படகோட்டியுடனான உரையாடல்களும் என எவ்வளவு எவ்வளவு ஆழம் சென்றிருக்க வேண்டிய நாவல் ஆனால் ஏதோ அவசரத்தில் எழுதப்பட்டதுபோல் உணர்தேன். சித்தார்த்தனும் அலைச்சல் ஊடாக ஓர் இடத்தை அடைகிறான். இப்புத்தகம் வாசிக்கையில் அலைச்சல் நன்றுதான், இன்னும் சொல்லப்போனால் அலைச்சல் இல்லாமல் வாழ்வில் சுவாரஸ்யமில்லைதான், அலையலாம் ஆனால் தொலைந்துவிடக்கூடாது என எண்ணிக்கொண்டேன்.
குழந்தைத்தனமான மனிதர்கள்:
ஆங்கில மொழியாக்கத்தில் ‘childlike people’ என்ற ஒரு அத்தியாயம் வருகிறது. அன்றாட வாழ்வில் இன்பம், துன்பம், உறவு, காமம், அன்பு, பணம், தேவைகள் என வாழ்பவர்களை குழந்தைத்தனமான மனிதர்கள என்கிறான் சித்தார்த்தன் அவன் பார்வையில். ஞானத்தேடலில் உள்ளவர்கள் மற்றவர்களை அப்படி நினைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் உண்மையில் குழந்தைத்தனமான சாதாரண வாழ்வை வாழ்வது எளிதல்ல. அனைத்தையும் துறந்து ஞானதேடலில் கடினமான பயணத்தை தேர்வு செய்ய தைரியம் வேண்டுமென்றால், அதேபோல் சாதாரண வாழ்வை வாழவும், அன்றாட வாழ்வில் இன்ப துன்பங்களில் உழல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். இதை சித்தார்ததன் உணர்ந்துக்கொள்கிறான் அவன் அனுபவத்தில். புத்தகத்தில் ஓரிடம் வரும். சித்தார்த்தன் மகனை தேடிச் செல்லும் பயணத்தில், சமனாவாக கமலாவை அவள் மாளிகையில் முதன்முதலில் சந்தித்த தருணத்தை நினைவுகூர்வான். முற்றிலும் வேறொருவனாக மாறி ஒருவன் அவன் கடந்த காலத்தையே காண்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான தருணம். சித்தார்த்தன் குழந்தைத்தனமான மனிதனாக மாறுவதற்கான முதல்படி அந்த மாளிகையில் கமலாவை சந்தித்ததுதான்.
இந்த புத்தகம் வாசித்தபோதும் வாசித்தபின்பும் மனதில் ஓடிக்கொண்டேயிருந்த ஒன்றென்றால், சாதாரண வாழ்வை விட்டு கிளம்பும் சித்தார்த்தன் போன்றவர்களை பேசுகிறோம். சாதாரண வாழ்விலேயே தங்கிவிடுபவர்களை பேசுகிறோம். ஒருகணம் சாதாரண வாழ்வு வேண்டாமென கிளம்பும் மனமும், மறுகணமே இல்லை சாதாரண வாழ்வே போதுமென தங்கிவிடும் மனமும் என மாறி மாறி உழலும் மனிதர்கள்தான் உண்மையில் பேசப்பட வேண்டியவர்கள். இப்புத்தகத்தில் வரும் படகோட்டி எனக்கு அப்படிதான் தோன்றினான். அவர்கள் வாழ்வு வெளி உலகத்திற்கு அமைதியாக தெரிந்தாலும், உண்மையில் அவர்கள் மனம் கம்பன் சொன்னதுபோல் ‘மத்துறு தயிர்’ தான்.
ஆறு:
ஆறு சொல்வதை கவனியென படகோட்டி சித்தார்த்தனிடம் சொல்கிறான். இந்தமுறை வாசித்தபோது ஆற்றை அப்படியே மனம் என மாற்றி வாசித்துப்பார்த்தேன். அப்படி வாசித்ததில் முற்றிலும் வேறொரு கோணம் கிடைத்தது.
புத்தர்:
பத்து வயதில் வரலாறு புத்தகத்தில் புத்த மதத்தை தோற்றுவித்தவர் என அறிமுகம். புத்த மதத்தை நிறுவ வேண்டும் என்று புத்தர் நினைக்கவில்லை என பின்பு தெரிந்துக்கொண்டேன். கல்லூரி காலத்தில் வேதமுறைகளால் சமூகத்தில் இருந்த ஏற்றதாழ்வுகளை எதிர்த்த கலகக்காரன் என்ற அறிமுகம். வேலைக்கு செல்ல ஆரம்பித்தபின் இளவரசன் ஒருவன் அனைத்தையும் துறந்து போதிமரத்தின் அடியில் ஞானம் பெற்றவன் என்ற அறிமுகம். இன்று எனக்கும் புத்தருக்குமான உறவென்பது சொல்லித்தீராது. சொன்னாலும் cliche வாக இருக்கும். ஆனால் எனக்கு புத்தர் வெறும் கண்மூடி தியானம் செய்யும் சிலையாக மட்டும் இல்லை.
சித்தார்த்தா இப்புத்தகத்தில் தனக்கு ஆசிரியர், குரு என்று ஒருவர் தேவையில்லை என முடிவுசெய்து பயனப்படுகிறான். தானே அனைத்தையும் கற்றரிவேன் என்ற மனம்போல்தான் எனக்கு தோன்றியது. பல நாட்களாகவே ஒருவருக்கு குரு என்று ஒருவர் தேவையா? என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒருநாள் மாலை பொழுதில் மகனுடன் பூங்காவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். இருபுறமும் மரங்கள். எனக்கும் மகனுக்கும் போட்டி. மரங்களில் கிளிகள் வந்தமருகின்றன. அப்படி மரத்தில் அமரும் கிளிகளை யார் முதலில் கண்டுபிடிப்பது என போட்டி. மரமும் பச்சை கிளியும் பச்சை. கண்டுபிடிப்பது கடினம். முதல் ஐந்தாறு மரங்களில் கிளியை அவனே கண்டுபிடித்தான். எனக்கு கண் வேலைசெய்யவில்லை, கண்ணாடி மாற்ற வேண்டும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டேன். பின்பு அவனிடம் எப்படி நீ கண்டுபிடிக்கிறாய் என கேட்டேன். அவன் சொன்னான், நீ கிளியை தேடுகிறாய், அதை கண்டுபிடிப்பது கடினம். நான் கிளியை தேடவில்லை. நான் அசைவை தேடுகிறேன். கிளி அமரும் கிளை அசையும். நீ அசைவை கண்டால் அங்கு கிளி அமர்ந்திருக்கும் என்றான். அவன் இதை ஒரு பெரிய தத்துவமாக எல்லாம் சொல்லவில்லை. லாஜிக்காக தான் சொன்னான். வாழ்வில் நேரடியாக பல அனுபவங்களை அடைகிறோம். பல நேரங்களில் கிளியை நேரடியாக நான் தேடியதுபோல ஏதொன்றை தேடி தேடி அலைகிறோம். சிலவற்றில் வெற்றி, சிலவற்றில் தோல்வி, பலவற்றில் அறிதலென நகர்கிறோம். ஆனால், தேடல் சுலபமாக அசைவை நோக்கும் மனமும் நுட்பமும் வேண்டும். அம்மனதையும் நுட்பத்தையும் அளிக்கும் ஒன்றே குருவென நான் கொள்கிறேன். அதை ஒரு மனிதரோ, புத்தகமோ, எழுத்தாளரோ எவர் அளித்தாலும் அவர் குருவே. புத்தரை நான் அப்படிதான் பார்க்கிறேன். புத்தர் எவரிடமும் நான் உனக்கு ஞானத்தை அளிக்கும் வழியை சொல்லித்தருகிறேன் என அழைக்கவில்லை. என்னை தொடர்ந்தால் நீ ஞானமடைவாய் எனவும் சொல்லவில்லை. மாறாக நாம் அவரை தொடர்கிறோம்.துன்பத்திலிருந்து விடுவிப்பவராக அவரை காண்கிறோம். ஆனால் நான் புத்தரை அசைவை உணரும் மனமும் நுட்பமும் அளிக்கக்கூடியவராக காண்கிறேன்.
மற்றபடி எல்லா மொழிபெயர்ப்பு புத்தகங்களுக்கும் உள்ள பிரச்சனை இந்த புத்தகத்திற்கும் உள்ளது. ஆங்கிலத்திலேயே ஒன்றி வாசிக்க முடியவில்லை. தமிழில் நன்றாகயிருக்க வாய்ப்புகள் குறைவு.
ஒரே புத்தகம் ஒரே மனிதனுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வேறு வேறாய் தெரியும். அதுவே ஒரு புத்தகத்தின் தன்மை. இந்த புத்தகம் எனக்கு அப்படிதான். சித்தார்த்தா, அன்று கடலிருந்து கால் நோக்கி வந்த அலையாக தெரிந்தது, இன்று கடலுக்கே திரும்பி செல்லும் அலையாக தெரிகிறது.

Comments
Post a Comment