சித்தார்த்தன் புத்தனாகி விட்டான்

மறதி என் நண்பன். கால் நனைத்து திரும்ப கடலுக்கே செல்லும் அலையென துரோகங்களை என்னுள் கரைக்கும் மழை. என்னை தன் வரவேற்பறையில் தேவையின்றி காக்க வைத்து சிரித்து மகிழ்ந்தவனின் முகத்தை என் நினைவிலிருந்து அழிக்கும் செல்ல குழந்தை. என் மகன்களிலேயே எனக்கு அன்னையர் தின வாழ்த்து சொல்லும் ஒரே மகன் நீ. எந்த வருடமும் நீ தவறியதில்லை என பெரு மகிழ்ச்சியுடன் தன் கண்களை துடைத்துக்கொள்ளும் என் அன்னைமுன் என்னை கைவிடாத தேவதை.என்னிடம் கோபித்துக்கொண்ட மனைவியிடம் அடுத்த நொடி உனக்கு காபி ஒரு ஸ்பூன் சீனீதானே என கேட்டு உபசரிக்கும் வயலினின் இசை.


மறதி என் பகைவன். என் கண் முன் நானே அறியாத விதத்தில் நான் வாழ்ந்த சுவடு கொஞ்சம் கொஞ்சமாக உருகும் மெழுகாக கரைந்து நீராகி வேறொரு உருவம் கொள்ளும் ஓரு வண்ணமற்ற நிகழும் கனவு. கையில் காய்ந்த இலைகளை கசக்கி தேவையான நேரத்தில் தேவையான நாட்களுக்கு கூண்டுக்குள் அடைத்த பறவையாய் கட்டுப்படுத்தும் நேரத்தில் சிலும்பியில் வட்டங்களாக மேலேறும் புகை. காதலியின் முன் நெஞ்சம் படபடக்க நிற்கும் பொழுதில் கடல் மண்ணில் புதைந்த சிப்பியென எங்கோ என் ஆழத்தில் சிக்கி வெளிவராத உன்மத்தம் பொருந்திய அந்த ஒற்றை சொல்லை பூட்டி வைத்திருக்கும் ராட்சஸனின் இடக்கை.
                                                               -- சித்தார்த்தன்.




                                                               ***

சித்தார்த்தனை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் கதைகள் அனைத்தையும் நானறிவேன். என் கதைகள் அனைத்தையும் அவனறிவான். அவன் கதைகள் என்மூலமாக இன்னும் உயிருடன் இருக்கின்றது. என் கதைகளோ சித்தார்த்தனின் நினைவுகளுடன் ஒருமுறை  இறந்துவிட்டது. என் இறப்புடன் அது முற்றிலும் இறந்துவிடும்.

நின்று நிலைபெறுவதற்கும் நினைவிழந்து நீராவதற்கும் இடையில்  சித்தார்த்தன் புத்தனாகி விட்டான். ஆம் புத்தனாகி விட்டான். ஆசையை துறந்தானா?அரசை துறந்தானா? தம்மபதம் அருளினானா? மெய்யாக புத்தனாகி விட்டானா? போதியின் வேரில் உறங்கினானா?

முதன்முதலில் எதை மறந்த தருணத்தில் மனம் பயம் கொண்டது என சித்தார்த்தனுக்கு நினைவில்லை. முன்னே கண்ணாடியில் தெரியும் உருவத்தை எங்கோ தொலைவில் நிற்கும் அந்நியனை போல் உணர்ந்த தருணத்திலா? மடியில் அமர்ந்து  தாடியில் பொம்மையை தேடும் தன் மகளிடம், உங்கள் பெயரென்ன குட்டி என கேட்ட தருணத்திலா? நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதில், 'இன்றில்லை' எனப்படுவது உடலில்லை என்பதா? நினைவில்லை என்பதா? நினைவில்லையென்றால் சித்தார்த்தன் இருக்கும்போதே இல்லாதவன் ஆகிவிட்டானா? அவ்வளவுதானா சித்தார்த்தன்? இவ்வளவு சீக்கிரம் மறப்பதற்கும், மறக்கபடுவதற்காகவுமா இத்தனை நாடகங்கள்?, இத்தனை வசனங்கள்?, இத்தனை மனிதர்கள்?. மனிதர்கள் தங்கள் பெயரை காட்டில் வளரும் யூக்கலிப்டஸ் மரங்களில் எழுதிவைக்கிறார்கள். அது அழியாத சுடர் என எண்ணம் கொள்கிறார்கள். மரம் தன் பட்டையை உரிக்கும்பொழுதில் பெயர் தொலைகிறது. அதை உணரும் நேரத்தில் எழுதியவர் இருப்பதில்லை. சிலர் புத்திசாலிகள் என வேரில் பெயர் எழுதுகிறார்கள். வேரும் ஒருநாள் மண் தின்று அழியும். நிலையாமை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.




                                                                ***

“சித்தார்த்தன்”.

“உள்ளேன் Miss.”

“வகுப்பு முடிந்தபின் என்னை ஆசிரியர் அறையில் வந்து பார்” என்ற தன் தமிழாசிரியையை எண்ணி அஞ்சியபடியே அறைக்குள் நுழைந்தான்.

“இந்த வருடம் உன் பெயரைத்தான் திருக்குறள் போட்டிக்கு கொடுத்திருக்கிறேன். நாளை இந்நேரம் வந்து போட்டிக்கான அதிகாரங்களை வாங்கிச்செல்” என்ற நொடியில் அவன் நினைவில் அறத்துப்பாலின் அதிகாரங்கள் நடனமாட தொடங்கிவிட்டன.பள்ளிப்போட்டி என்றால் அறத்துப்பால்தான் என ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு தோன்றாமல் இருந்தால்தான் வியப்பு.அடுத்தநாள் ஆசிரியர் அழைத்து அதையே உறுதிபடுத்தினார்.

அன்று மாலை வீட்டிற்கு சென்றதும் முகம் கழுவி, தேநீர் அருந்தி,  தங்கையுடன் தொலைக்காட்சி சானலுக்காக சிறிது சண்டையிட்டுவிட்டு, அம்மன் கோவிலுக்கு செல்கிறேன் என அன்னையிடம் விடைபெற்று கிளம்பியவன் நேராக போய் நின்ற இடம் வீபூதி பிள்ளையார். அவர் மேல் தன் வேண்டுதலை மூன்றுமுறை அவர் தலையிலும், மூன்றுமுறை அவர் பாதங்களிலும் விபூதியாக அள்ளி படைத்துவிட்டு,அவர் வயிற்றில் விபூதியிட வேண்டுமா என குழம்பி பின் அவர் கோபித்துக் கொள்வார் என அரை மனதுடன் விட்டுவிட்டான். அவர் கையில் இருந்த விபூதி வேறொருவனின் வேண்டுதல் என தெரிந்தும், அது தாய் தந்தையரை சுற்றிவந்து பெற்ற அறிவென எண்ணி தன் நெற்றியில் இட்டுக்கொண்டான்.

மதுரையில் எவருக்கும் அம்மன் கோவில் என்றால் மீனாட்சியம்மன் கோவில்தான். சித்தார்த்தனுக்கு தாயுடன் சென்றால் மீனாட்சி தரிசனம், பாட்டியுடன் சென்றால் பொற்றாமரைக் குளத்தின் படியில் அமர்ந்து அரிசி முறுக்கு உண்ணும் வாய்ப்பு, தனியாக சென்றால் கோவில் சுவற்றில் திருக்குறள் வாசிக்கும் மகிழ்ச்சி.

திருக்குறளை புத்தகமாக அறையில் அமர்ந்து வாசிப்பதற்கும் , பொற்றாமரைக் குளத்தினருகில் நின்று அரிசி முறுக்கின் வாசனையுடன் வாசிப்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. புத்தகத்தின் வழியாக திருக்குறளை தன் தமிழாசிரியை சொல்லிக்கொடுப்பதாகவே சித்தார்த்தனுக்கு தோன்றும். திருக்குறளும், சாக்பீஸும் , கம்பும் , ஆசிரியரும். ஆனால் அம்மன் கோவில் குளத்தினருகே நின்று வாசிக்கையில் வள்ளுவனே இறங்கிவந்து பாடம் கற்பிப்பான். சித்தார்த்தன் அன்று நான்கு மணிநேரத்தில் அறத்துப்பால் முழுவதையும் வள்ளுவனிடம் பாடம் கேட்டு மனதில் பதிந்துக்கொண்டான் என பின்பொறு நாள் என்னிடம் பகிர்ந்தான்.

சித்தார்த்தனுக்கு ஒருமுறை நினைவில் ஏற்றிவிட்டால் பின் மறப்பதென்பது கிடையாது. ஒருவாரம் கழித்து போட்டிநாள். பெரிய மேடை. நினைவு சித்தார்த்தனுக்கு மூளை என்றால் ,மேடையின் முன் ஆயிரம் பேர் அமர்ந்திருந்தாலும் அச்சம் கொள்ளாமல் பேசுவது அவனுக்கு பிள்ளையார் அருளிய வீபூதி. அன்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மேடையின் பின்புறத்தில் தமிழாசிரியை அவனிடம் பதட்டமாக பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தலை வேகமாக அசைந்துக்கொண்டிருக்கிறது. அவர் கை வளையலின் ஓசை ஒவ்வொரு நரம்பிலும் பட்டு தெறிக்கிறது. அடுத்தது சித்தார்த்தன். கூட்டம் கைதட்டுகிறது. “அறத்துப்பால் இல்லை . நான் தவறாக கூறிவிட்டேன். உன்னால் முடிந்ததை சொல். நூறு குறள் சொல்ல வேண்டும். முடிந்தால் பத்து குறளாவது சொல்.” என தமிழசிரியர் சொல்லிமுடிக்க மேடையேறுகிறான்.

தன்முன் அமர்ந்திருக்கும் இரண்டாயிரம் கண்களையும் ஒரே நொடியில் நேர்கொண்டு பார்த்தான். கண்களை மூடினான். பசி கொண்ட ஒரு யட்சன் அவனுள் இறங்கியிருக்க வேண்டும்.மூடிய கண்களுக்குள் கருமணிகூட அசையவில்லை. நூறு குறளும் அவன் முடித்து மேடையிறங்கி நீர் அருந்தி முடித்த பின்பும் கரவொலி நிற்கவில்லை.

                                                                ***

நீண்ட நாட்களுக்குப்பின் ஊருக்கு வந்திருந்த சித்தார்த்தனை காண சென்றிருந்தேன். "வாடா அருவிகளில் குளித்து வரலாம்" என்றான்.பல நாட்கள் திட்டமிடலுக்குப்பின் உருப்பெறும் பயணங்களே தடம்மாறும் பொழுது, ஒரு மணி நேரத்தில் ஒரு பயணத்தை முடிவு செய்து உடனே கிளம்புவதென்பது கல்லூரி காலங்களிலிருந்தே சித்தார்த்தனுடன் மட்டுமே சாத்தியம். எப்பொழுதும் அப்படியான பயணங்களில் கல்லூரி நாட்களில் கண்டு ரசித்த சினிமா, வாங்கிய டிக்கெட்கள், மனதில் காதல் கொண்டு பார்த்த சீனியர் ஜூனியர் மாணவிகள், அவர்கள் உயரம் , நிறம் , சிரித்தால் யாருக்கு தெற்றுப்பல் அழகு, கல்லூரி வெளியே டீக்கடை பெஞ்சில் நாள் முழுதும் தூங்கிக்கொண்டிருப்பவனை எழுப்பி நேற்றுவரை சீனியராக இருந்துவிட்டு இன்று ஆசிரியராக சேர்ந்துவிட்ட அழகான மேடமின் பெயர் என்ன என்றால் சரியாய் சொல்லும் அவன் திறன், இன்றும் கையில் smith chart கிடைத்தால் ஒரு மாணவனுக்கு அதை விளக்கி சொல்லிவிட முடியும் என கூறும் அவன் சொற்களையெல்லாம் கேட்டு நினைவுகளை அசைப்போட்டு கொண்டே பயணிக்கலாம்.இந்த ஒரு காரணத்திற்காகவே சித்தார்த்தன் அடுத்த ஐந்து நிமிடங்களில் பயணம் கிளம்பலாம் என்றாலும் அவனுடன் கிளம்ப அனைவரும் தயாராய் இருப்போம்.

அன்று சென்ற பயணத்தில் சித்தார்த்தன் சில நினைவுகளைப் பகிர்ந்தான். அவன் பேசியதில் பல பெயர்கள் தவறு, அவன் பகிர்ந்த பல சம்பவங்கள் தவறு. காலை நேர பனி போல் ஈரமும் மூட்டமுமாக இருந்தது அவன் பேச்சு. சட்டென்று என்னை சீண்டுவதற்காகவே , “டேய், அந்த ஒநாயும் குருவும் வரும் அசோகமித்திரனின் கதை பெயர் என்ன?" என கேள்வி எழுப்பினான். கதை நினைவில் இருந்தாலும் கதையின் தலைப்பு நினைவில்லை. “உனக்கு மிகவும் பிடித்த அசோகமித்திரனின் கதை பெயரே உனக்கு தெரியாதா?” என சிரித்தான்.

வழியில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப நிறுத்தினோம். என்னை வாகனத்தில் இருக்க சொல்லிவிட்டு பணம் கட்டி வருவதாக உள்ளே சென்றவன் பல மணித்துளிகள் கழித்தும் வெளிவரவில்லை. வாகனத்தை ஓரமாக நிறுத்தி உள்சென்று பார்க்கலாம் என்றெண்ணிய நிமிடத்தில் அலைபேசியில் அழைத்தான். “மச்சான், கொஞ்சம் உள்ளே வா” என்றான். உள்ளே தன் தலையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தவன், “வாடா, என் வங்கி அட்டையின் நான்கு இலக்க எண் என்னவென்று மறந்துவிட்டேன். மூன்றுமுறைக்கு மேல் தவறாக அழுத்தியதால் அட்டை லாக்காகிவிட்டது” என்றான்.

பணம் கட்டி வெளிவந்த தருணத்தில் சித்தார்த்தன் ஒன்றும் பேசவில்லை. வாகனத்தை என்னை ஓட்ட சொல்லிவிட்டு எங்கோ வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் கண்களின் கருமணிகள் அசையவில்லை. அவனை சங்கடபடுத்த வேண்டாமென வேறு திசைக்கு பேச்சை மாற்றினேன். சட்டென திரும்பியவன் "பிரயாணம்" என்றான். என்னவென்று குழம்பி நின்ற என்னிடம் அழுத்தமாக மறுமுறை சொன்னான் “பிரயாணம்  அசோகமித்திரனின் ஓநாய் கதை".

                                                                    ***

சித்தார்தனின் மனைவி அன்று அழைத்திருந்தாள். சித்தார்த்தனும் அவளும் காதலித்த காலத்திலிருந்தே அவள் என் தங்கை. “அண்ணா, இப்பொழுதெல்லாம் அதிகமுறை என்னிடம் சண்டையிடுகிறார். எப்போது சண்டையிட்டாலும் , உன்க்கு அறிவில்லை, நீ என் அறிவிற்கு உகந்தவலில்லை என்ற அவரின் ஆணவம்தான் வெளிபடுகிறது” என்றாள்.

சித்தார்த்தனுக்கு இரண்டுநாள் கழித்து அலைபேசியில் அழைத்தேன். சரசரவென வெடித்து சிதறிவிட்டான். "நீங்கள் எல்லாம் சராசரிகள். உங்களோடு வாழுவதென்பது வேதனை. சின்ன விஷயங்களைக்கூட திட்டமிட்டு நினைவில் வைத்து உங்களால் செய்ய முடியாது. அவளால் முடியவே முடியாது.பால் தீரப்போகும்  முன் சொல்வதில்லை. எப்போதும் தீர்ந்த பிறகே நான் ஓட வேண்டும். அன்று கார் சாவியை தொலைத்து விட்டாள். ஓடி ஓடி நகல் சாவியை செய்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது. கடைசியாக சென்ற உணவகம் நினைவிருக்காது. சென்றமுறை கோவிலுக்கு சென்றபோது என்ன நிறத்தில் சேலை அணிந்தாள் என்பது நினைவிருக்காது. அலுவலகம் செல்கையில் அடுத்த தொடர்வண்டி எத்தனை மணிக்கு என நினைவிருக்காது". வெடி வெடியென வெடித்துவிட்டு "நான் பிறகு பேசுகிறேன். இரவு உணவருந்த எனக்காக காத்துக்கொண்டிருக்கிறாள்" என்று அலைபேசியை வைத்துவிட்டு சென்றுவிட்டான்.

நண்பா, அறிவாணவம் கொண்டவர்கு சராசரிகளுடன் வாழ்வது வேதனை. என்னை போன்ற சராசரிகளுக்கு அறிவே வேதனைதான்.

                                                                ***

சித்தார்த்தன் அமெரிக்கவாசி. நான் ஆஸ்திரேலியவாசி. இருவரும் ஒரே நேரத்தில் மதுரையில் இருக்கும்படி திட்டமிட்டு வந்திருந்தோம். சித்தார்த்தனுக்கு அன்று நாற்பதாவது பிறந்தநாள். பொற்றாமரைக் குளத்தில் நின்று உனக்கு பிடித்த அதிகாரத்தை வாசித்து சொல் என்றேன். ‘மெய்யுணர்தல்’ வாசிக்க ஆரம்பித்தான். தடுமாறி தடுமாறிதான் வாசித்தான். இரண்டாவது குறள் வாசிக்கும்போது முதல் குறள் மறந்துவிடுகிறது என்றபடி சிரித்தான். தன் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிகிறது என்பதை அவன் உணர்ந்திருந்தான். வள்ளுவன் தன்னை கைவிட்டு வேறெங்கோ ஒரு கௌதமனுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருப்பான் என அவன் உணர்ந்திருந்தான். அதை அவன் ஏற்றுக்கொள்ளவும் தொடங்கிருந்தான். "அடுத்தமுறை வரும்போது எனக்கு இந்த பொற்தாமரை குளமோ, அரிசி முறுக்கின் வாசனையோ, விபூதி பிள்ளையாரோ, திருக்குறளோ, வள்ளுவனோ, நீயோ , ஏன் எனக்கு நானேகூட என் நினைவில் இருக்கமாட்டேன் நண்பா" என்றான். சித்தார்தன் என தன் பெயர்கொண்ட தங்க நாணயம் ஒன்றை பையிலிருந்து எடுத்து பொற்றாமரைக் குளத்தில் வீசி எரிந்தான். "இந்த நாணயம் குளத்தின் தரைதொடும் முன் நான் அதை மறந்து துறந்துவிடுவேன்" என்றான். வள்ளுவன் ஒருமுறை மற்ற கௌதமர்களை எல்லாம் சிறிது விட்டுவிட்டு இந்த சித்தார்த்தனை கட்டி அணைத்துக்கொள்ள மாட்டானா என தவித்தேன்.

                                                                ***

சித்தார்த்தன் புத்தனாகி விட்டான். இன்று இந்த நொடி நீங்கள் அவனை அடித்து அவமானபடுத்துங்கள்.அடுத்த நொடி உங்கள் காலுக்கடியில் ஊர்ந்து நகரும் கொடிய விஷ பாம்பை தன் கையில் பிடித்து தூர எறிந்து உங்களை காப்பான்.

சித்தார்த்தன் புத்தனாகி விட்டான். அடை மழை காலையில் கையில் குடையின்றி நிற்கும் உங்களிடம் குடையுடன் ஓடி வருபவனை எட்டி உதைத்து சேற்றில் நீங்கள் தள்ளி விடுங்கள். எழுந்து உங்கள் கால்களில் குடையை வைத்துவிட்டு சிரித்தபடி நடந்து சென்றுவிடுவான்.

சித்தார்த்தன் புத்தனாகி விட்டான்.அவனிடம் ஒரு தீக்குச்சியை வாங்கி அவனையே கொளுத்திவிடுங்கள். உங்கள் கையில் நெருப்பு பட்டுவிட்டதா என கேட்டு தன் கண்ணீரால் உங்கள் காயங்களை குளிர்வித்து கண்களை மூடுவான்.

சித்தார்த்தன் புத்தனாகி விட்டான். அவனிடம் நண்பனாய் நடித்து அவன் முதுகில் கத்தியை இறக்கிவிடுங்கள். திரும்பி உங்களை கட்டியணைத்து, முதுகில் வடியும் குருதியை சிலந்தி என எண்ணி, நண்பா என் முதுகில் ஊரும் சிலந்தியை கொஞ்சம் தட்டிவிடு என்பான்.

சித்தார்த்தன் புத்தனாகி விட்டான். நீங்கள் அடித்து அவமானபடுத்தியதோ, சேற்றில் தள்ளி விட்டதோ, அவனை கொளுத்தியதோ, அவன் முதுகில் கத்தியை இறக்கியதோ அவன் நினைவில் இல்லை. குடம்பை தனித்து ஒழித்து பறந்த பறவைபோல் அவன் நினைவுகள் அவன் மூளையை தனித்து ஒழித்து பறந்துவிட்டது. அது வானில் பறக்கும் மற்ற புள்ளினங்களுடன் பறக்க முயற்சி செய்து உச்சம் தொட முடியாமல் மண்ணில் புதைந்து போனது. உச்சி மரக்கிளையில் உள்ள கூட்டில், தாய் பறவைக்காக காத்திருக்கும் மற்ற பறவை குஞ்சுகளுடன் தஞ்சம் அடைந்த அவன் நினைவுகளை, சிறிதும் இரக்கமின்றி கொத்தி கொன்றது தாய் பறவை. உப்பாகி கடலில் கரைந்து விடலாமென முயற்சி செய்த அவன் நினைவுகளை கடல் கல்லாக்கி கரையில் எரிந்தது. புதையல் காக்கும் பூதத்திடம் சென்ற அவன் நினைவுகள், என்னையும் காப்பாயா என பரிதவித்து கேட்டது. பூதம் தன் கொம்பினால் தள்ளி அதைகண்டு  எள்ளி நகையாடியது.

சித்தார்த்தன் புத்தனாகி விட்டான். ஆசையை துறந்துவிட்டான். உறவுகளை துறந்துவிட்டான். தான் சம்பாதித்த பெயரையும் புகழையும் துறந்துவிட்டான். தன் கோபங்களை துறந்துவிட்டான். தன் வன்மங்களை துறந்துவிட்டான். தன் அகந்தையை துறந்துவிட்டான். தன் அகத்தை துறந்துவிட்டான்.அவன் அனைத்தையும் துறந்துவிட்டான்.அனைத்தும் அவனை துறந்துவிட்டன. பரஸ்பர துறத்தல் அமைதியானது.

முதன்முதலில் எதை மறந்த தருணத்தில் மனம் பயம் கொண்டது என சித்தார்த்தனுக்கு நினைவில்லை. ஆனால் எனக்கு நினைவிருக்கிறது. அன்று ஒருநாள் இன்னொரு நண்பனின் வீட்டில் ஒரு கூடுகையில் என்னை சந்தித்த சித்தார்த்தன், “ஹலோ!,இதற்குமுன் நாம் சந்தித்திருக்கிறோமா? என் பெயர் புத்தன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

சித்தார்த்தன் என் கண்முன்னே புத்தனாகி விட்டான்.

Comments