கொதிக்கும் நீரில் நொடிப்பொழுதே வாழும் நீர்குமிழிகளைப்போல் அகம் முழுவதும் நினைவுகள் நிரம்பி இருந்தால் கடல். பெரும் களிறு இழந்த பாகன் போல் உருகிய பனியாய் நினைவுகள் அகன்று அகம் தன் வெற்றிடத்தை நிரப்ப அன்று உழுத நிலம்போல் நிற்கையில் மலை. கடலுக்கு செல்வது கொட்டி தீர்ப்பதற்கு. மலை உச்சிக்கு செல்வது நிரப்பிக்கொள்வதற்கு.
ஒரு குவளை அமுதத்தை விஷமாக்க ஒரு துளி நஞ்சு. ஒரு கடலை விஷமாக்க எத்தனை துளிகள் நஞ்சு?இதுவரை எத்தனை மனிதர்கள்? எத்தனை துளிகள் நஞ்சு? அனைத்தையும் தன்னுள் வாங்கியும் கடல் இன்னும் கொண்டாடி தீர்க்கிறது. நஞ்சுண்டும் ஆடுவதால் கடல் தற்பரம், கடல் கவிதை, கடல் கற்பனை, கடல் அன்னை, கடல் பெண் பால்.
எத்தனை கேட்டாலும் அத்தனையும் அருள்வது மலை. மலையின் உள்ளங்கை நிலம் நோக்கி. எத்தனை கொடுத்தோம் எத்தனை மனதை ஆற்றினோம் என்ற போதம் இல்லை மலைக்கு. தன் தலையில் அமர்ந்து எச்சமிடும் பறவைக்கும், தன் தலையில் அமர்ந்து முத்தமிடும் பறவைக்கும் ஒரே பாடலை இசைப்பதால் மலை கலைஞன். மலை தந்தை. மலை ஆசிரியன். மலை ஆண் பால்.
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்" (சிலம்பு)
சிலம்பு தற்குறிப்பேற்றணியின் உச்சம். கடல், மலை உச்சிகளில் தற்செயலாக எதிர்கொண்ட இரு தருணங்களின்மேல்,அனுபவங்களின்மேல் என் குறிப்பேற்றி பார்க்கிறேன். தற்குறிப்பேற்றுவது எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்றால், உனக்கு அம்மாவை எவ்வளவு பிடிக்கும் என்ற கேள்விக்கு தன் இரு கைகளையும் அகல விரித்து "அவ்ளவ்வ்வ்வ்" என கூறும் குழந்தையாகி விடுகிறேன். தற்குறிப்பு ஒரு அனுபவத்தை ஆழமாக்குகிறது. தற்குறிப்பு ஒரு தரிசனத்தை அளிக்கிறது. தற்குறிப்பு வாழ்வின் சிறு சிறு ஞானத்தை அருள்கிறது. அந்த தரிசனத்தை , ஞானத்தை அடைந்தவுடன் தற்குறிப்பில் இருந்து வெளியேறுவது நல்லம்.
Olinda falls . எப்போதும் கூட்டம் அதிகம் உள்ள அருவி. அரை மணி நேரம் அங்கமர்ந்து மனிதர்கள் அருவிக்கு எதற்கு வருகிறார்கள் என கண்டால் தெரியும். போட்டோ எடுப்பதற்கு. பாறைமேல் அருவி விழும் சத்தம், இரு கற்களுக்கு இடையில் லாவகமாக செல்லும் நீர், நீர்வழிப்படூஉம் இலையெல்லாம் கூட்டத்தில் கவனிக்க முடியாது. ஆனால் வெயில் காலங்களில் காலை ஐந்து மணிக்கு சென்றால் விடிய ஆரம்பித்திருக்கும் வானம். இருபது நிமிடங்கள் உள்ளே நடக்க வேண்டும். சிறிது பயமாக தான் இருக்கும். முதல் முறை சென்ற பொழுது ஒரு பறவையின் குரல் மனிதனின் சிரிப்பொலிபோல் கேட்டது. ஆனால் இருவாசிகள் அங்கே இல்லையென்றும் தெரியும். அடுத்த முறை ஒரு telephoto lens உடன் சென்று அந்த பறவையை படமெடுக்க வேண்டும்.
அன்று Olinda falls கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்குகையில் அருகில் இன்னொரு caravan வாகனம். அந்த நேரத்தில் அந்த இடத்தில் இன்னொரு மனித தடயம் ஆச்சரியம். பயம் கூட. ஆனால் வந்தாயிற்று உள்செல்வோம் என நடந்தேன். ஒரு பறவை மனிதனின் சிரிப்பொலி போல் கத்தியது. கைபேசியை எடுத்துப்பார்த்தேன் டவரில்லை. அதுவரை கண்ட அனைத்து cannibal படங்களும் நினைவிற்கு வந்து சென்றன. ஆனாலும் அந்த காலை வேளையும் அருகில் கேட்ட அருவியின் ஓசையும் தொடர்ந்து நடக்க செய்தன. அருவியின் அருகே சென்றதும் ஒரு மனிதன் கண்களை மூடி அமர்ந்திருந்தான். மெய்யாக மனிதன் தானா என்ற ஐயம் இருந்தது. ஆனால் அடுத்த நொடி என்னைக் கண்டு புன்னகைத்தான். அப்படி ஒரு புன்னகையை புத்தன் தான் புரிய முடியும் என்ற என் எண்ணம் அந்த பறவைக்கு அபத்தமாக தோன்றியிருக்க வேண்டும். அது மனிதனின் சிரிப்பொலிபோல் மறுபடியும் கத்தியது.
அருகில் வந்து கைகுலுக்கி தன்னை Olivier என அறிமுகப்படுத்திக் கொண்டான். இந்த காலை வேளையில் எப்படி? நீ இங்கு வசிக்கிறாயா என கேட்டேன். தான் ஜெர்மனியில் இருந்து வந்திருப்பதாகவும், கடந்த ஐந்து மாதங்களாக உலகத்தைச் சுற்றி வருவதாகவும் சொன்னான். இருபது வயது இளைஞன். அனுபவங்களைத் தேடி பயணிக்கிறேன் என்றான். கார் பார்க்கிங்கில் இருந்த caravanஐ வாடகைக்கு எடுத்து ஆஸ்திரேலியா முழுவதும் சாலை வழிப்பயணம் செய்கிறேன் என்றான். எப்படி? பயணம் செய்ய பணம் தேவையில்லையா? அப்படி எல்லாம் கிளம்பி பயணம் செய்ய முடியுமா என்று என்னுள் தோன்றிய என் அபத்த எண்ணம் அந்த பறவைக்கு கேட்டிருக்க வேண்டும். அது மனிதனின் சிரிப்பொலிபோல் இன்னொருமுறை கத்தியது.
பறவையின் ஒலி கேட்ட நொடியில் சட்டென கண்ணை மூடி ஒரு நிமிடம் நின்றான். அந்த பறவையை, அதன் குரல் கொண்டு உருவத்தை மனதில் கட்டி எழுப்புகிறானோ என கற்பனை தோன்றியது. கண் திறந்தவனிடம் அந்த பறவை மனிதனின் சிரிப்பொலிபோல் கத்துகிறது என்றேன். இல்லை மனிதன் அந்த பறவையின் குரல் போல் சிரிக்கிறான் என்று சொல்லிக் கைகுலுக்கி விடைபெற்று சென்று விட்டான்.
ஆதியில் பறவைதான் இருந்திருக்க வேண்டும். மனிதன் பறவையிடம் தான் சத்தங்களை கற்றிருக்க வேண்டும்.அவன் சொன்னது சரிதான். நான் தான் அந்த Laughing kookaburra போல் சிரிக்கிறேன். Olivier போன்ற மனிதர்கள் கணத்தில் தோன்றி வாழ்வின் சிறு ஞானத்தை அளித்தபின் மறைந்துவிடுகிறார்கள்.அவன் ஜெர்மனியில் இருந்து என்னிடம் இந்த ஒற்றை வரியை சொல்வதற்காகவே பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கிறான் என தோன்றியது மற்றும் மலை உச்சி மனதில் இராசயண மாற்றங்களைக் கூட செய்யவல்லது என்ற என் அபத்த எண்ணங்கள் எல்லாம் எனக்கே கேட்டது. அந்த பறவையின் குரல்போல் என் சிரிப்பொலி எனக்கே கேட்டது.
Brighton கடற்கரை. காலை ஆறு மணி இருக்கும். ஞாயிற்றுக்கிழைமை என்பதால் அங்காங்கே சில மனிதர்கள் காதில் headphone மாட்டி ஓடிக்கொண்டிருத்தார்கள்.இளையராஜாவை சிலர் ஏன் வெறுக்கிறார்கள் என்பது இதுவரை எனக்கு புரியாத ஒன்று.அதுபோலதான் கடற்கரையில் ஏன் காதை மூடிக்கொள்கிறார்கள் என்பதும்.
தூரத்தில் ஒரு வயதான பெண் நடந்து வந்துகொண்டிருந்தார். வயதான என்றால் அறுபது வயதிருக்கும். அருகில் வர வர நடையில் நடுக்கம் தெரிந்தது. நான் வெள்ளைக்கார தாத்தா பாட்டிகளுடன் தானாக பேச்சு கொடுப்பதில்லை. சிலர் மிக அன்பாக பேசுவார்கள். சிலர் மிக கடினமாக (rude) பேசுவார்கள். யார் எப்படி என தெரியாததால் ஒதுங்கியே இருந்துவிடுவது.
பத்தடி தூரத்தில் ஒரு கட்டை பெஞ்சில் அமர்ந்து தடுமாறியபடி யாருக்கோ அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார். திரும்ப திரும்ப அழைத்தார். மறுமுனையில் பதிலில்லை என நினைக்கிறேன். கார் பார்க்கிங் வழியாக என்னைக் கடந்து ரோட்டிற்கு சென்றார். சில நிமிடங்கள் நின்று விட்டு திரும்பி கடற்கரைக்கு வந்தார். சரி ஏதோ உதவி தேவைப்படுகிறது என தெரிந்தது. அருகில் சென்று ஹலோ என்றேன். நல்ல பாட்டிதான் போல சிரித்து ஹலோ என்றார். ஏதாவது தேடுகிறீர்களா என கேட்டேன். ஆம், ஒரு டாக்ஸி புக் செய்ய வேண்டும் என்றார். அந்த நேரத்தில் Brighton கடற்கரையில் டாக்ஸி கிடைப்பது கடினம். ஊபர் பார்த்தேன். முதல் டாக்ஸி இருபத்தைந்து நிமிடம் கழித்து காட்டியது.
நிலைமையை விளக்கி. காத்திருக்கிறீர்களா இல்லை உங்கள் வீடு அருகில் என்றால் நான் ட்ராப் செய்கிறேன் என்றேன். இன்று இப்படி கேட்க சாத்தியமில்லை. இது நடந்தது கோவிட் காலத்திற்கு முன்னால். சிறிது யோசித்தவர் சரி என்றார்.
காரில் ஏறி அமர்ந்தவர், தனக்கு பார்க்கின்சன் நோய் சென்ற மாதம் கண்டறியபட்டது எனவும், தன் மகன் சில நாள் உடனிருந்து கவனித்துக்கொண்டான் ஆனால் அவன் வேலை பிரிஸ்பேனில் எனவும், விரைவில் கேர் சென்டருக்கு செல்லவிருப்பதாகவும் அதற்குமுன் கடற்கரைக்கு வந்ததாகவும் சொன்னார். வெளிநாட்டு வாழ்க்கை எதை கற்றுக்கொடுத்திருக்கிறதோ இல்லையோ ஒன்றை எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. ஊரில் இப்படி என்னிடம் யாரும் பகிர்ந்தால் மனம் வேலை செய்யும். இங்கு மூளை வேளை செய்கிறது. அவர் சொல்ல சொல்ல அசௌகிரியமாக உணர்ந்தேன். இவர் ஏன் என்னிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும். இது அவரின் தனிப்பட்ட விஷயம் அல்லவா என்றெல்லாம் தோன்றியது. அமைதியாக கேட்டுக் கொண்டே வந்தேன்.
தீடீரென்று Footy என சொல்லப்படும் விளையாட்டை பற்றி பேச ஆரம்பித்தார். நடுங்கிய குரலில் பேசுனாலும் மிக தீவீரமாக பேசினார். எனக்கு footy பற்றி ஒரு மண்ணும் தெரியாது. அவர் நேற்று நடந்த மேட்சில் எவன் எத்தனை கோல் அடித்தான் என தொடங்கி ஆஸ்திரேலியாவில் எப்படி footy வந்தது , அதன் வரலாறு என்ன என்பதெல்லாம் கூறி முடித்தார். முதலில் சிறிது சுணக்கமாக இருந்தாலும் அவர் பேச பேச எனக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
இறங்குகையில் உற்சாகமாக இறங்கினார். வேறெதுவும் உதவி தேவையா என கேட்டேன். இல்லை அரைமணி நேரம் பொறுமையாக கேட்டதற்கு நன்றி. Appreciate your time and patience என சொல்லி கிளம்பிவிட்டார்.
சிலநேரம் நமக்கு தேவை வெறுமனே நாம் பேசுவதை கேட்கும் காதுகள் தான் என தோன்றியது. அதனால்தான் மக்கள் கடற்கரைக்கு வருகிறார்கள் போல.கடலிடம் கொட்டி தீர்க்கிறார்கள் போல. அன்று நான் அரை மணி நேரம் கடலாக இருந்தேன்.


Comments
Post a Comment