நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்கமுடியாது என்ற சச்சிதானந்தனின் கவிதை ஒன்றுண்டு என அண்ணன் ஒருவர் சமீபத்தில் சொன்னார். அதுபோல நான் நினைவில் மதுரையுள்ள ஓர் உயிர். எந்த நகரத்தில் வாழ்ந்தாலும் நான் நினைவில் மதுரையில்தான் வாழ்கிறேன். சிறுவனாக இருந்தபோது ஒரு குழந்தை தன் அன்னைமேல் கொண்ட காதல் பெரிதெனினும், இளைஞனாக இருந்தபோது ஒரு ஆண் பெண்மேல் கொள்ளும் காதல் பெரிதெனினும், கீட்ஸ் வாசித்த நாட்களில் ஒரு கவிஞன் கற்பனைமேல் கொண்ட காதல்தான் பெரிதெனினும் மாறி மாறி தோன்றியது. ஆனால் என்றும் மாறாமல் உறுதியாக தோன்றியது ஒரு மதுரைக்காரன் மதுரை என்ற மண்ணின்மேல் கொண்ட காதல் பெரிது என்பதுதான்.
உறங்கினால் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிடுவது என் வழக்கம். அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஓர் அதிகாலையில் கதிரவனின் இருகீற்றை உள்ளங்கையில் ஏந்திவந்து மெதுவாக தட்டினார் முத்துக்கிருஷ்ணன்.எழுந்த உடன் திகைப்பு. எப்படி இந்நேரத்தில் இவர் இங்கே. வருவதாக சொல்லவில்லையே என்று நான் சிந்திக்க தொடங்கிய வேளையில், உள்ளங்கையில் இருந்த ஒரு கீற்று காகிதமாகியது. மற்றொரு கீற்று பேனா ஆகியது.
மதுரையின் முழுமையான வரலாற்றை எழுதப்போகிறேன் என்கிறார். மதுரையின் வரலாறு மன்னர்களின், செல்வந்தர்களின், அதிகாரமிக்கவர்களின் வாழ்க்கைகளிலும் புராணங்களிலும் மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. மதுரையின் வரலாறு இந்த நகரத்தை இரண்டாயிரம் வருடத்திற்குமேல் உயிர்ப்புடன் வைத்திருக்கும் எளிய மக்களால் எழுதப்பட்டது. மதுரை மண்ணின் சிறு கல் தன் கால்களை இடறியபோதும் விழுந்த இடத்திலிருந்து எழுமுன் மண்ணை முத்தமிட்டு சாமியென தொட்டு தொழுதெழும் மதுரைமேல் பித்து கொண்ட ஈரமான உள்ளங்களால் எழுதப்பட்டது. அந்த வரலாறு எங்கும் பாடப்படவில்லை. அதை பாடுவதற்காகவே கதிரவனிடம் இருகீற்றை வாங்கி காகிதம் பேனாவாக மாற்றியுள்ளேன் என புன்னகைக்கிறார்.
சரி. மதுரையைப்பற்றி இவர் கூற கேட்பதென்பது, கம்பன் வாயால் விருத்தம் கேட்பதுபோன்றது, பாரதியின் வாயால் பாஞ்சாலி சபதம் கேட்பதுபோன்றது. கசக்குமா. ஆர்வமாக கேட்க ஆரம்பித்தேன்.
நிற்க. தூங்காநகர நினைவுகள் புத்தகம் மதுரையை உலக வரைபடத்தில் ஒரு புள்ளியென மட்டும் பார்பவர்களுக்கு வெறும் உள்ளங்கை அளவு சதைக்குவியல். மதுரை நகரை நேசிப்பவர்களுக்கு, தெரிந்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு செந்நிற இதயம். என்னைப்போல் நினைவில் மதுரையுள்ள உயிர்களுக்கு இதயத்துடிப்பு. இன்று உங்களுக்கு வெறும் சதைக்குவியல் என்றாலும் அதை பற்றி கையில் ஏந்திடுக. மதுரை உங்களைத் தேடி ஒருநாள் வரும். உங்கள் உள்ளங்களில் அமரும். அன்று அது இதயமாக மாறும். மதுரை இதயமாக மாறியபின் தூங்காநகர நினைவுகள் இதயத்துடிப்பாக கேட்கும். மதுரையின் இதயத்துடிப்பை பாடலாக பாடிய பாணனாக கலைஞனாக முத்துக்கிருஷ்ணன் இருப்பார்.
தூங்காநகர நினைவுகள் வாசித்த காலம் முழுவதும் அதை வாசித்த உணர்வைவிட முத்துக்கிருஷ்ணன் அவர்கள் அருகில் அமர்ந்து சொல்லக்கேட்டது போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. இன்னும் சொல்லப்போனால் சில சமயங்களில் திருவிழா கூட்டத்தில் குழந்தையை கைபிடித்து அழைத்துச் செல்லும் அன்னையாக நம் கைபிடித்து மதுரையை சுற்றிக்காட்டுவதுபோலவும், ஆற்றில் இறங்கும் அழகரை தன் குழந்தை காண தோள்மேல் தூக்கி காட்டும் தந்தைபோலவும், கையில் குச்சிக்கொண்டு உரிமையாக இத்தனை காலம் மதுரையில் வாழ்ந்த உனக்கு மதுரை முழுவதுமாக தெரியவில்லை, வா நான் கற்றுத்தருகிறேன் என சொல்லும் ஆசிரியன்போலவும், மற்ற அனைத்து சமயங்களில் நண்பனாகவும் உருமாறி பல வருடங்கள் நான் வாழ்ந்த மதுரையை எனக்கு புதிய கோணத்தில் காட்டிய எழுத்து தூங்காநகர நினைவுகள் புத்தகம்.
செம்பொற் சிலம்பொன்று கையேந்தி வந்த வம்பப் பெருந்தெய்வம் போல் புத்தகம் கடல் கடந்து ஒருநாள் வந்து சேர்ந்தது. தூங்காநகர நினைவுகள் புத்தகத்தை மாணிக்கங்கள் உள்ளடக்கிய கண்ணகியின் சிலம்பாகவும், புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிலம்பினுள் உள்ள மாணிக்கங்கள் எனவும் நான் கற்பனை செய்துவைத்துள்ளேன். கண்ணகி சிலம்பை உடைத்தது உண்மை அறியா மன்னனுக்கு உண்மை உணர்த்த, தூங்காநகர நினைவுகள் புத்தகத்திலிருந்து தெறித்த ஒவ்வொரு மாணிக்கமும் வாசிப்பவர்களுக்கு மதுரையின் அறியப்படாத வரலாற்றை காட்டுவதற்கே என்பது என் எண்ணம். உயர்வு நவிற்சியென தோன்றினாலும், நினைவில் மதுரையுள்ள ஓர் உயிர் வேறெப்படி இந்த புத்தகத்தை அணுக முடியும்?
தெறித்த மாணிக்கங்களிலிருந்து அனைத்தும் என் மூளைக்குள் சென்று அமர்ந்துவிட்டது. சில மட்டும் என் இதயத்தில் அமர்ந்துகொண்டது.
இதயத்தில் அமர்ந்த முதல் மாணிக்கம் என்னை சங்ககால மதுரைக்கு ஓர் உலா அழைத்துச்சென்றது. காலங்களை கடந்து நம்மை அழைத்துச் செல்லும் வல்லமை எழுத்திற்கு உண்டென உணர்த்திய அத்தியாயம். அத்தியாயம் முழுவதும் புனைவின் எழுத்து மொழி. காட்சி காட்சியாக நம் கண் முன் எழுத்து விரியும் மாயம். கடம்பவன காடுகளும், யானையை மறைக்கும் நெற்கதிர்களும், கறி பொரிக்கும் புகையும், நாளங்காடிகளும், அல்லங்காடிகளும், மயில்போல் நடங்கும் சூல் கொண்ட பெண்களும், இசையும், பாணர்களும், திருவிழாக்களும் என சங்ககால மதுரையில் சில மணி நேரம் வாழ்ந்த அனுபவம். சங்க இலக்கியபாடல்களில் மதுரையை வாசித்த மனதால்தான் இப்படியொரு மதுரையை காட்சியாக எழுதமுடியும் என்பது என் அழுத்தமான கருத்து. இந்த அத்தியாயத்தை அப்படியே திரைப்படமாக்கலாம். அப்படியொரு காட்சி விவரனைகள் உள்ள அத்தியாயம்.
அடுத்த மாணிக்கம் கான் சாகிப் என்கிற கும்மந்தானைப் பற்றி அவன் பிறந்ததிலிருந்து தூக்கிலிடப்பட்டது வரை அகலமாக பேசும் அத்தியாயம். அகலமாக பேசினாலும் அதே சமயம் இரண்டுமுறை தூக்குகயிறு அறுபட்டு மூன்றாவது முறைதான் கான் சாகிப் உயிர் பிரிந்தது என்ற நுட்பமான தகவலையும் ஒருசேர விவரிக்கும் அத்தியாயம். கான் சாகிப் பற்றிய மற்ற பனுவல்கள், கான் சாகிப் புரிந்த போர்கள், கான் சாகிப்பின் பல பெயர்கள், கான் சாகிப்பை கொண்டு பெயரிடப்பட்டுள்ள இடங்கள் என அடுக்கடுக்காக கான் சாகிப்பை தெரிந்துக் கொள்ளலாம். இந்த அத்தியாயத்தை ‘மருதநாயகம்’ என அனைவரும் அறிந்த பெயரால் தலைப்பிட்டிருக்கலாம். கான் சாகிப் என்று பெயரிட்டதால் மதுரையின் வரலாற்றில் அனைத்து மதங்களுக்கும் பங்குள்ளது என உணரலாம். குருதிக்கு மதமில்லை என்பதுபோல் மதுரைக்கும் மதமில்லை.
தாதுவருட பஞ்சம் என்ற அத்தியாயத்தை கைகள் நடுங்காமல் மனம் படபடக்காமல் வாசிக்க முடியாது. பசியின் கொடுமையை உணராதவர் எவருமில்லை. பஞ்சம் எப்படி அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தால் உருவாகப்பட்டது என்பது தொடங்கி, உயிரிழந்த மக்களின் துயரத்தை எழுத்தில் கடத்திய அத்தியாயம். மக்கள்பட்ட அவதியை துயரத்தை கண்ணீராக மாற்றி அதை மதுரையின் வரலாற்றில் பதிவு செய்த எழுத்து.
Thomas Keneally என்ற எழுத்தாளர் ஒருமுறை அமெரிக்காவில் உள்ள Pfefferberg என்பவரின் கடைக்கு செல்கிறார். Pfefferberg நாஜி ஹிட்லர் கொடுமைகளிலிருந்து தப்பியவர். Oskar Schindler என்பவர் தன் செல்வத்தையெல்லாம் செலவுசெய்து நாஜிகளிடமிருந்து 1200 யூதர்களின் உயிரை காப்பாற்றினார் என்ற உண்மை சம்பவத்தை புத்தகமாக எழுத Thomas Keneally-ஐ சம்மதிக்க வைக்கிறார். Thomas Keneally 'Schindler's ark' என்ற புத்தகத்தை எழுதுகிறார். பின்னர் அது ‘Schindler’s list’ என்ற திரைப்படமாக Steven Spielberg இயக்கத்தில் வெளிவந்தது.
குஞ்சரத்தம்மாளை வாசித்தபோது இந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. பலர் அறியாத, மதுரையின் வரலாற்றில் முக்கியமான பங்குவகித்த, பல உயிர்களை தன் செல்வத்தையெல்லாம் இழந்து காப்பாற்றிய குஞ்சரத்தம்மாளை இதற்குமுன் எந்த புத்தகத்திலும் நான் வாசித்ததில்லை. அவள் காப்பாற்றிய மக்களின் பட்டியல் மிக நீண்டது , அவள் சேமித்த சொத்துக்களையெல்லாம் உலையில் போட்டது, அவள் நகையெல்லாம் கஞ்சியாகமாறி மக்களின் பசியாற்றியது என்பதெல்லாம் வாசிக்க வாசிக்க புத்தகத்தில் இருந்த குஞ்சரத்தம்மாள் நொடிப்பொழுதில் புத்தகத்திலிருந்து வெளியேறி வானில் நட்சத்திரமாக மாறி மின்னி, பசிக்கிறதா? சாப்பிடுகிறாயா? என வாஞ்சையாக கேட்பதுபோல் தோன்றியது. குஞ்சரத்தம்மாளைக் கொண்டு ஒரு தனி புத்தகமே முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுத வேண்டும் என்பதும் பேரவா. அப்படி எழுதினால் அது 'Schindler's ark' போல் கிளாசிக் வரிசையில் சேரும் என்பதில் சிறு ஐயமுமில்லை.
மதுரை மக்கள் தினந்தோறும் கடந்து செல்லும் மதுரா மில்ஸ், மதுரையின் வெயிலைப் பருக வந்த Georges gasté என்ற ஒவியன், மதுரை பற்றிய உலகத்தவரின் குறிப்புகள், விடுதலை வேள்வியில் மதுரை,தபாலின் சிறகுகள் மற்றும் கீழடி என தூங்காநகர நினைவுகள் புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களைப்பற்றிய வாசிப்பனுவத்தை எழுதிவிட வேண்டும் என முழுக்கடலையும் தன் நாக்கால் நக்கியே குடித்துவிட ஆசைக்கொண்ட பூனையின் பேராசை எனக்குண்டு. பின்பு வாசிப்பனுபவமே ஒரு பெரிய புத்தகமாகிவிட வாய்ப்புள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் புத்தகத்தைவிட மதுரை மற்றும் மதுரையுடன் அவர்கள் கொண்ட உறவைப்பற்றி பேசியதில் ஒன்றை உணரலாம். ஒருவரின் நினைவுகளையெல்லாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மேலெழுப்பி கொண்டுவர ஓர் எழுத்தால் ஒரு புத்தகத்தால் முடியும் என்றால் அதுவே புத்தகத்தின் வெற்றி.
இந்த புத்தகத்தின் இன்னொரு சிறப்பு புத்தகத்தின் உள்ளே நிறைந்திருக்கும் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் தகவல்கள். பெரும் உழைப்பின் பிறப்பு இப்புத்தகம். பல வருடங்கள் இந்த நகரத்தின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்து வாழ்ந்து எழுதிய படைப்பாகவே இந்த புத்தகத்தை பார்க்கிறேன்.தூங்காநகர நினைவுகள் புத்தகம் செம்பதிப்பு அல்லது collector edition அச்சிடப்பட வேண்டும். அனைவரின் வீடுகளிலும், அனைத்து பள்ளி கல்லூரி நூலகங்களிலும் இந்த புத்தகம் இருக்கவேண்டும். நினைவில் மதுரையுள்ள உயிர்கள், மதுரையைவிட்டு வெளியே இருந்தாலும் மதுரையிலேயே இருந்தாலும் இந்த புத்தகம் வாசிக்கும்தோறும் மதுரை என்ற நகரின்மேல் கொண்ட நேசிப்பு இன்னும் ஆழமாகும். மதுரையின் வரலாற்றில் இது முக்கியமான புத்தகம். இது முத்துக்கிருஷ்ணன் அவர்களின் புதிய மதுரைக்காஞ்சி.

Comments
Post a Comment