அல்லிசைப் புள்ளினங்கள் - 1

 இரவில் விழித்திருந்து வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. என் மேசை அருகே ஒரு ஜன்னலுண்டு. ஜன்னல் வெளியே ஒரு மரமுண்டு. மரங்களில் எப்போதும் பறவைகள் வந்து அமர்வதுண்டு. இரவில் நான் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு எழுத்தாளரும் அம்மரத்தில் அமர்ந்து எனக்காக பாடும் அல்லிசைப் புள் என எனக்கு தோன்றுவதுண்டு.


விழித்திருப்பவனின் இரவு புத்தகம். வாசிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் புத்தகம் என கையில் ஏந்தினேன். வாசிப்பும் அப்படித்தான் ஆரம்பித்தது.வாசிக்க வாசிக்க மனதில் பல கேள்விகள். எனக்கு புத்தகங்கள் பதிலளிப்பவையாக என்றைக்குமே இருந்ததில்லை. கேள்விகள் தான். ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி விசைக்கொண்டு பறந்தெழ வைக்கும் கேள்விகள். புத்தகத்தின் வாயிலாக கேள்விகளை மட்டுமே பெற்றுக்கொள்கிறேன். பின் அக்கேள்விகளுக்கான பதில்களை தேடி பயணம். அறிவின் மூலம், அனுபவத்தின் மூலம் , சக மனிதர்கள் மூலம் பதில்கள் கண்டடைய முயற்சிக்கிறேன்.சில வெற்றிகள் பல கற்றல்கள். பதிலே இல்லை என்று தெளிவாக தெரிந்த கேள்விகளைக்கூட அது அளிக்கும் பயணத்திற்காக மட்டுமே சுமந்தலைந்திருக்கிறேன். 


எழுத்தாளர்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் புத்தகங்கள் ஒரு பதினைந்து வருடங்களுக்குமுன் கையில் கிடைத்திருந்தால் அப்போது மகிழ்ந்து இன்று வெறுத்திருப்பேன். நல்லவேளை எனக்கு இதுபோன்ற புத்தகங்கள் அன்று கையில் கிடைக்காதது நல்லம் என்று தோன்றுகிறது. இன்று எனக்கு தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரும் சிறிது சிறிதாக ஓர் எறும்பு தன் உணவை சேமிப்பதுபோல் நானே கண்டடைந்தவர்கள்.

பெங்களூரில் நான்கு வருடம் வேலைப் பார்த்த காலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் கொண்டாட்டம் ஞாயிறு மதியம்தான் முடிவடையும். பலதிசைகளிலிருந்து பறந்து வரும் பறவைகள் போல் நண்பர்கள் வெள்ளிக்கிழமை இரவுகளில் எங்கள் அறையில் கூடுவார்கள். ஞாயிறு மதியம் அனைவரும் தத்தம் அறைகளுக்குக் கிளம்பியபின் எனக்கான நேரம்.என் ஞாயிறு மதியங்கள் அனைத்தும் பெங்களூர் forum mall-ல் இருந்த லாண்ட்மார்க் புத்தகக்கடையில் கழியும். ஒன்று அல்லது இரண்டு புது எழுத்தாளர்களையோ, அல்லது  திரைப்பட இயக்குனர்களையோ பெயர் குறிப்பெடுத்துக்கொண்டு பல வாரங்கள் அவர்களைப்பற்றியும் அவர்கள் புத்தகங்களையும், திரைப்படங்களையும் வாசித்தும் பார்த்தும் குறிப்பெடுப்பேன். ஒருகட்டத்தில் லாண்ட்மார்க் சலிப்படைய, பழைய புத்தகக்கடை நோக்கி திரும்பினேன்.நன்றாக நினைவிருக்கிறது , ஒரு மழை கொட்டிய மாலை வேளையில் பெங்களூர் டிராப்பிக்கில் வால்வோ பஸ்ஸில் இரண்டு மணி நேரம் பயணம் செய்து நகரின் மையத்திலிருந்த ஒரு பழைய புத்தகக்கடையில் எனக்காக காத்திருந்த Alejandra pizzarnik, Julio Cortazar, Emily Dickinson, John Keats உடனெல்லாம் கை குலுக்கினேன். விழித்திருப்பவனின் இரவு புத்தகம் அன்று கையில் கிடைத்திருந்தால் ஒரு அறையில் அமர்ந்து இவர்களைப்போன்ற பல எழுத்தாளர்களைக் கண்டடைந்திருப்பேன். ஆனால் எழுத்தாளர்களைத் தேடி என் பயணத்தால் பெற்ற அனுபவத்தை இழந்திருப்பேன். எப்போது ஒன்று மறுக்கப்பட்டாலும் அதைவிட சிறந்த ஒன்றை நோக்கியே தள்ளப்படுவேன் என்ற என் நம்பிக்கைக்கு இதுவும் ஓர் உதாரணம்.

இப்புத்தக வாசிப்பின்போது எழுந்த கேள்விகள் மற்றும் நான் அடைந்த பதில்கள் பல. எந்த கேள்விக்கும் சரி தவறு என்ற பதிலில்லை. சொல்லப்போனால் எந்த கேள்விக்கும் பதிலில்லை, கோணங்கள் மட்டுமே உண்டெனவும் எண்ணத்தோன்றுகிறது. இக்கேள்விகள் மற்றும் பதில்கள் அனைத்தும் ஒரு வாசகன் என்ற கோணத்தில் சிந்தித்தவை.

  1. வாசகர்கள் எழுத்தாளரை அறிந்துக் கொள்ள வேண்டுமா? எழுத்தாளரின் படைப்பு மட்டும் வாசகர்க்கு போதாதா?
          வாசகர்கள் கண்டிப்பாக எழுத்தாளரை அறிந்துக்கொள்ள வேண்டும். வாசிக்க ஆரம்பித்து ஓரளவு வாசித்தபின் எவருக்கும் ஒரு தேடல் பிறக்கும். அத்தேடலின் முதல்படி தன்சுற்றத்திடமிருந்து அந்நியப்படுவது. வாழ்வின் பொருளென்ன? வாழ்வு நிலையற்றது என தெரிந்தும் மக்கள் இவ்வளவு வன்மத்தோடும், பொறாமையோடும் , மற்றவர்களை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற வேகத்தோடும் ஏன் ஓடுகிறார்கள். புற்றீசல் வாழ்க்கை என எல்லாம் தோன்றும். இப்பெரும் கூட்டத்தின் சிறுதுளி நானல்ல என விலகி,  மனிதர்களை எல்லாம் பெரிய வட்டத்தில் அடைத்து , அருகில் சிறுவட்டம் அமைத்து ஞானம் அடைந்து விட்டதாகவும் அல்லது ஞானத்தின் தேடலில் உள்ளதாகவும் தன்பால் சிந்தித்து தன்னையே ஏமாற்றி அமரும் வாய்ப்புகள் அதிகம். தவறில்லை. அது ஒரு பருவம். மனமெனும் மாய இசைக்கருவியின் ஒரு தந்தி, ஒரு துளை. அப்படி ஒரு பருவம் எனக்குமிருந்தது.

'The brothers karamazov' நாவல். உலகின் முதல் மூன்று சிறந்த நாவல் எதுவென்று என்னிடம் கேட்டால் முதல் மூன்று இடமும் 'The brothers karamazov' தான். அதில் ஒரு பள்ளி சிறுவன். அவனை சக நண்பர்கள் கற்களால் அடிக்கிறார்கள். நாவலின் நாயகன் அல்யோசா அவனைக் காப்பாற்றுகிறான். பின்பு அச்சிறுவன் இறக்கும் தருணம். அத்தருணத்தில் நாவலின் நாயகனுடன் சிறுவனின் தந்தை பேசும் இடம், மகனை இழந்த தாய் ஒரு பாதிரியாரிடம் பேசும் இடம், நான்கு மகன்கள் இருந்தும் அவர்களிடம் பாசம் காட்டாத தந்தை, நாவல் முழுவதும் வரும் உரையாடல்கள் என வாசித்து இன்றும் மனதில் தங்கிய நாவல்.

தஸ்தாவஸ்கியை 2008 ஆம் வருடம் கண்டடைந்த பின்பு இரண்டு வருடம் அம்மனிதனை ஒருநாள் தவறாமல் வாசித்தேன்.பின்பு Joseph Frank எழுதிய தஸ்தாவஸ்கியின் biography வாசித்தேன். பின்பு தெரிந்தது அவனுக்கு அல்யோசா என்ற மகன் இருந்திருக்கிறான், அவன் நான்கு வயதில் இறந்திருக்கிறான், மகனின் இறப்பை தாளமுடியாமல் தஸ்தாவஸ்கி துன்புற்றிருக்கிறான். தஸ்தாவஸ்கிக்கு முதல் மனைவின் மகன் மேலும் பாசம் ஆனால் அம்மகன் அதை புரிந்துக்கொள்ளவில்லை. சாவின் விளிம்பிலிருந்து திரும்பி சமூகத்திற்குள் நுழைந்திருக்கிறான்.தஸ்தாவஸ்கியைப்பற்றி இத்தனை தெரிந்துக்கொண்டபின்பு அவன் எழுத்தை மறுவாசிப்பு செய்தால் புரிகிறது , மனிதர்களை சபித்து அந்நியப்பட்டு தனிவட்டத்திற்குள் அமர அனைத்து வாய்ப்பும் காரணமும் இருந்த மகத்தான எழுத்தாளன் தஸ்தாவஸ்கியே மனிதர்களுடன் உறவாடி அவர்களுக்காக அவர்களுடன் வாழ்ந்து அவர்கள்பால் பேரன்பு கொண்டு மகத்தான எழுத்தை அளித்திருக்கிறான் என்று. இது புரிந்த கணத்தில் மனதில் இருந்த ஆணவமும் அந்நியப்படுதலும் அறியாமையும் குழந்தைகள் அடுக்கிய தீப்பெட்டி வீடு சரிவதுபோல் சரிந்து காலுக்கடியில் விழுந்தது. வாழ்வின் பெருவட்டத்திற்குள் இருந்தே ஆழமான அர்த்தமான வாழ்வை வாழமுடியும் என்று தஸ்தாவஸ்கி என் கைபிடித்து இழுத்து வந்திருக்கிறான். என் வாழ்வை மாற்றிய சில முக்கிய தருணங்களில் இதுவும் ஒன்று. தாஸ்தாவஸ்கியைப் பற்றி தெரிந்துக்கொள்ளவில்லை என்றால் இதை இழந்திருப்பேன்.
  1. ஏன் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல எழுத்தாளர்கள் தற்கொலை முடிவை எடுத்தார்கள்?
          சிக்கலான கேள்விகளை மனம் எழுப்பும் போதெல்லாம் அனைத்தையும் மூடி வைத்து உறங்கச்சென்றுவிடுவது வழக்கம். ஓன்று கேள்வியின் வீரியம் குறையுமென்றும், இரண்டு கனவில் உறக்கத்தில் ஏதேனும் விடை கிடைக்குமென்றும் உள்ள அசட்டு நம்பிக்கை. இக்கேள்வி மனதில் தோன்றிய போதெல்லாம் நன்றாக உறங்கினாலும்  இக்கேள்விக்கு பதில் காண இயலவில்லை. ஆனால் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். எழுத்தாளர்களும் சாதாரண மனிதர்கள்தானே. Hemingway குடும்பத்தில் தற்கொலைகள் அதிகம், அவருக்கு ‘hemochromatosis’ என்ற genetic disease இருந்திருக்கிறது. இறப்பதற்கு சில வருடங்கள்முன் இரண்டு விமான விபத்தில் சிக்கி அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். எதுவும் அவர் முடிவுக்கு நியாயம் கற்பிப்பதல்ல. கிழவனும் கடலும் வாசிக்கும் அனைவரும் கிழவன் Santiago வாக Hemingway வை பார்ப்பதுதான் வழக்கம். எனக்கு அவர் தூண்டிலில் சிக்கிய பெரிய மீனாக தன்னையும், Santiagoவாக தன் துன்பங்களையும் எண்ணி அப்புத்தகத்தை ஏன் எழுதியிருக்கக்கூடாது என தோன்றுகிறது. பெரும் போராட்டத்திற்குபின் அம்முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றுகிறது. இக்கோணத்தில் வாசித்தால் கிழவனும் கடலும் வேறொரு புத்தகமாகவும் Hemingway வேறொரு மனிதனாகவும் தெரிகிறார்.

சில்வியா பிளாத் மரணம் இன்னும் சிக்கல். அவரின் மரணம் புரிந்துக்கொள்ள முடியாதது. சில்வியா என்றால் அவரின் மரணம்தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் எனக்கு சில்வியா என்றால் அவரின் வாழ்வுதான், கவிதைதான். அவரின்  கடிதங்கள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அதை வாசித்தால் சில்வியாவை சிறிது புரிந்துக்கொள்ளலாம், ஆனால் அதில் உள்ள சில்வியாகூட, சில்வியா என்ற ஆழியின் சிறுதுளி .

மிஷிமாவின் தற்கொலை தீவிர உச்ச மனநிலையின் வெளிப்பாடு. மிஷிமாவை வாசிக்க மிக அதிர்வாகயிருந்தது. மிஷிமாவைவிட என் விருப்பத்திற்குரிய ஜப்பானிய எழுத்தாளர் ‘Yasunari Kawabata’. அவரும் தற்கொலை செய்துக்கொண்டார்.நான் வாசித்த வரையில்  கவபாதாவின் snow country நாவல் கொடுத்த மனவெழுச்சிக்கு இணையாக எந்த ஜப்பானிய எழுத்தும் அளித்ததில்லை. இந்நாவலை வாசித்தபின்பே கவபாதாவின் முடிவை அறிந்தேன். கவபாதா மிஷிமாவின் நண்பன். நண்பனின் இறப்பை தாளமுடியாமல் அவர் தக்கொலைச் செய்துக் கொண்டதாக ஒரு செய்தியும் உண்டு.

இறுதியில், இவர்கள் கண்களிலெல்லாம் காசர்கோடு ரயில் தண்டவாளத்தில் ஜெயமோகன் கண்களில்பட்ட  ‘இலையின் நுனியில் உடல்முழுதும் கதிரவனின் ஒளியாக மாறிய புழு’ விழவில்லையே என்ற ஆதங்கமும் துயரமும் மட்டுமே எஞ்சுகிறது.

  1. வாசகன் எழுத்தாளரிடமும் எழுத்திலும் அறத்தை எதிர்பார்க்க வேண்டுமா?
          Ethics is not absolute but relative என்பது என் சிறுபுரிதல். இக்கேள்வியை சிந்தித்துக் கொண்டிருந்தபோது முதலில் அறம் என்றால் என்ன என வரையறுக்க முயன்றேன். தோல்வி. ஏனென்றால் அறம் என்பது சுற்றம், சூழ்நிலை, காலம், மரபு, அறிவியல், தன்னறிவு, சமுகத்தின் கூட்டு நம்பிக்கை என பலவற்றால் வரையறுக்கப்படுவது. மாறக் கூடியது.

என் அனுபவத்தில் சமீபத்திய உதாரணம் டால்ஸ்டாய்.என் கோணத்தில் எனக்கு அறமென கற்பிக்கப்பட்ட அளவுகோல் வைத்து அவரை அளந்திருக்கிறேன். சிறு கோப்பையால் கடலை அளந்துவிடலாம் என்ற அறியாமை. டால்ஸ்டாயுடன் இனிப்பும் கசப்பும் கலந்த உறவே எனக்கிருந்திருக்கிறது. அவர் எழுத்தை வாசித்ததால் அவரை கட்டியணைத்தும், அவர் மரணப்படுக்கையில் அவர் மனைவி சோபியாவை பார்க்கவில்லை என்பதால் அவர்மேல் வெறுப்பும் இருந்தது.எனக்கு டால்ஸ்டாய் ஒரு யானை. இருக்கும்போது தன் இருப்பை முழுமையாக உணர்த்தவும், இல்லாதபோது தன் இல்லாமையை அதனினும் முழுமையாக உணரச்செய்வதும் யானையின் குணம். டால்ஸ்டாயும் அப்படியே. சரி முழுமையாக அவரை வெறுத்துவிடுவோம் என துணிந்து ‘Cathy porter’ மொழிபெயர்த்த  ‘The diaries of Sophia Tolstoy’ புத்தகத்தை ஒரு பழைய புத்தகக்கடையில் கண்டெடுத்தேன். வாசிக்க வாசிக்க புரிந்தது நான் எவ்வளவு பெரிய ‘hypocritic’ சிந்தனையுடன் டால்ஸ்டாயை அணுகியுள்ளேனென்று. இன்று எந்த கணவனும்  மனைவியின் டைரியில் அவனைக் குறித்து என்ன எழுதியிருக்கிறார்கள் என அறிய முயன்றால் அது சோபியாவின் டைரியைவிட ஆச்சரியங்கள் நிறைந்தாகயிருக்கவே  வாய்ப்புகள் அதிகம். என் மனைவியின் டைரி உட்பட. ‘மண்டியிடுங்கள்  தந்தையே’ புத்தகமும் டால்ஸ்டாயை அணைத்துக்கொள்ள இன்னொரு காரணம்.

இவ்விஷயத்தில் எனக்கு புரிதலை அளித்தவன் Charles Bukowski. The damn old dirty Charles fucking Bukowski. Bukowski வாசித்தபின்பே எழுத்தில், எழுத்தாளரிடத்தில் நான் கொண்ட என் அறத்தின் அளவுகோல்கள் அனைத்தும் உடைந்து தூள்தூளாக நொறுங்கி வீழ்ந்தது.

எழுத்தாளர் என்பவர் முழுவதும் அவர் எழுதும் எழுத்து அல்ல. எழுத்து என்பது எழுத்தாளருக்கு அத்தருணத்தில் நிகழும் உச்ச மனநிலை. நினைத்த நேரத்தில் அந்த மனநிலைக்குள் செல்ல எழுத்தாளராலே முடியுமா என்றும் தெரியவில்லை. அப்படியிருக்க எழுத்தாளர் புத்தனாகயிருக்க வேண்டிய அவசியமில்லை என்ற புரிதலுடன் கடப்பது நன்று. படைப்பையும் படைப்பாளியையும் பிரித்தணுக எனக்கு இந்த அளவுகோல் உதவுகிறது.

  1. வாசிப்பும், இத்தனை எழுத்தாளர்களும் வாசகனை ஆட்கொள்கிறார்களே! வாசகன் ஒருவன் எழுத்தாளனுக்கு அல்லது படைப்பிற்கு எவ்வளவு அருகில் செல்லலாம் அல்லது வாழ்வில் எந்த அளவிற்கு இடமளிக்கலாம்?
          ஆசை துன்பத்தின் ஆதி என்கிறது புத்தம். பற்றற்று இருப்பதே துறவு என்கிறது சில மத நம்பிக்கைகள். ஆனால் ஆசைக் கொள்வதும் , ஆசைக் கொண்டவற்றின்மேல் பற்றுக்கொண்டிருப்பதும் தான் மனித வாழ்க்கை. பற்றுக்கொண்டவற்றிடமிருந்து நினைத்த கணத்தில் ஒரு நொடியில் வெளியேறிவிட முடியுமென்றால் அதுவே ஞானம், துறவு, எவ்வமருக்கும் ஏகம். புத்தகமும் , வாசிப்பும் அதன்படியே அமைத்துக்கொள்வது சிறப்பு என நினைக்கிறேன். எவ்வளவு ஆழம் ஒரு புத்தகத்திற்குள் சென்றாலும் , மனம்போதும் என்றுணர்ந்த நொடியில் வெளியேறிவிட வேண்டும்.மனதை அவ்வாறு பயிற்றுவிக்க வேண்டும். அவ்வளவு இடம் ஒரு புத்தகத்திற்கு அளிப்பதே நன்று என தோன்றுகிறது.

இன்னும் எழுத்தாளன் அரசியல் பேச வேண்டுமா?,  இலக்கியத்தில் அரசியல் தேவையா?, ஒவ்வொரு எழுத்தாளர்களையும் கண்டடைந்த என் பயணம் மூலம் அடைந்த அனுபவமும் நினைவுகளும், எழுத்தைத் தாண்டி இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் கொண்ட ஆவல்கள், அது அவர்கள் எழுத்தில் செலுத்திய தாக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கியம், ஜப்பானிய இலக்கியம்,ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இலக்கியம் என இன்னும் பல கேள்விகளையும், புதிய மன பயணங்களுக்கான பாதையும் இப்புத்தகம் உருவாக்கியுள்ளது. ஒரு புத்தகம் சிந்திக்க இத்தனை சாத்தியக்கூறுகளை அளித்திருக்கிறது என்றால், வாசிப்பவரின் மனதிற்கேற்ப சாத்தியங்களை உருவாக்குகிறதென்றால் அது தங்கப்புத்தகம், என் பல தங்கப்புத்தகங்களில் இதுவும் ஒரு தங்கப்புத்தகம்.

கருத்துகள்