நான் பார்த்த வரையில் பெண்கள் சிறுமியாகி விடுகிறார்கள். அம்மா, சித்தி, பாட்டி, அத்தை என நான் பார்த்த பெண்கள் விசேஷதிற்கு சென்று வந்த மதியத்தில் நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி பேழைக்குள் வைக்கையில் சிறுமியாகி விடுகிறார்கள். ஆரம்பத்தில் பத்து பெட்டிகளில் அடுக்கியதிலிருந்து, நாங்கள் வளர வளர பள்ளிக் கட்டணம், வீட்டுச் செலவு என கொஞ்ச கொஞ்சமாக அது ஒரு பெட்டியாகும் வரையில் ஒவ்வொரு முறையும் அம்மா சிறுமிதான். அதனால் தானோ என்னவோ நானும் என் புதையல்களை பேழைக்குள் வைக்கும் போதெல்லாம் சிறுவனாகிவிடுகிறேன். ஒரு புத்தகம் வாசித்து பத்து நாட்களுக்குமேல் அது மனதில் ஏதோ ஒரு தொந்தரவை தந்தபடியே இருந்தால் இங்கு வந்து பதிவுசெய்துவைத்துக்கொள்கிறேன். ஒன்று இது என் பேழை. இரண்டு, திருச்செந்தாழை போன்ற எழுத்தாளர்களின் கணமான ஆழமான கதைகளை சுமந்துக்கொண்டே வாழவும் முடியவில்லை, ஒரேயடியாக தூக்கி தூரத்தில் வைக்கவும் முடியவில்லை. பேழைக்குள் போட்டு வைப்போம், தேவையானபோது சிறுவனாகமாறி எடுத்து அணிந்துக்கொள்வோம் என எண்ணி சமீபத்தில் திருச்செந்தாழையின் கதைகள் வாசித்த அனுபவத்தை இங்கு இறக்கிவைக்கிறேன்.
எங்கள் வாசகர்வட்டம் எனக்கு முற்றிலுமாக அறிமுகமேயற்ற பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.அதில் பலர் கைகுலுக்கி சென்றுவிட, க.சீ. சிவக்குமாரும் திருச்செந்தாழையும் அவ்வப்போது கனவிலே வரும் அளவிற்கு உடனிருக்கிறார்கள். இதைச்சொல்ல கொஞ்சம் கூச்சமாகதான் இருக்கிறது. ஆனால் மனதில் பட்டதை சொல்லத்தானே வேண்டும்.
திருச்செந்தாழையின் எழுத்து எனக்கு எதற்கு பிடித்திருக்கிறது என யோசிக்காமல் சொல்ல முடிகிறது.
- கவிஞர் என்பதுதான் முதற்காரணம். கவிஞர்கள் மேல் எனக்கு தனிக்காதல். ‘என்னடா வாழ்க்கை’ என்ற எண்ணம் எனக்கும் ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறது. கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் வாழ்வின் மேல் மேலும் மேலும் காதல் கொள்ளச்செய்திருக்கிறார்கள். ஒரு கவிதையால் முழுவாழ்வின் கசப்புகளையும் நோய்மைகளையும் பதட்டங்களையும் கரைய வைக்க முடிகிறது. அப்படி எத்தனை வரிகள் இந்த புத்தகத்தில். புத்தகத்தில் வரிகளை அடிக்கோடிடலாம் ஆனால் தன்மனதிலுள்ள அடிக்கோடிட்ட வரிகளையெல்லாம் சேர்த்து ஒரு மனிதன் புத்தகமாக்க முடியுமென்றால் அது இந்த புத்தகம்தான்.
- சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்த நாட்களில் முழுமைதன்மை (wholeness) கொண்ட கதைகள்தான் திருப்தியளிக்கும். கதாபாத்திரங்களையும் கதைகளத்தையும் சொல்லும் ஆரம்பம், உச்சகட்ட திருப்பங்கள் கொண்ட நடுப்பகுதி, எதிர்பாராத முடிவு என்ற கட்டமைப்பு கொண்ட கதைகளே நல்ல கதைகள் என தோன்றும். இன்று திரும்பிப்பார்த்தால் வாசித்த முழுமைத்தன்மையற்ற கதைகள்தான் நினைவில் நிற்கின்றன. கதை நினைவிலிருக்கிறது என சொல்வதைவிட கதை வாசிக்கும்போது கதை தந்த உணர்வு நினைவிலிருக்கிறது. திருச்செந்தாழையின் கதைகள் அப்படியானவை. முழுமையற்றவைகளில் ஒளிந்திருக்கும் ஒரு மாயத்தன்மையும், மாயத்தன்மைமேல் என் மனம் கொள்ளும் வசீகரமும் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். தனி ஒருவனாக உள்ளிருந்து சொல்லும் கதையாகட்டும் அல்லது உறவுகளுக்கு நடுவிலிருந்து கதை சொல்வதாகட்டும் திருந்செந்தாழையின் கதைகளில் அம்மாயத்தன்மையை உணரமுடிகிறது. எங்கோ ஆழ்மனதில் கிடக்கும் காயப்பட்ட மிருகத்தை வயலின் இசையால் ஆறுதல்படுத்துவது போன்ற மொழி, கதைசொல்லல் முறை எனவும் சொல்லலாம் அல்லது திருவிழாவில் ஏற்கனவே ஆடிப்பாடி ஓடியாடி திரியும் சிறுவன் கையில் ‘இந்தா வச்சுக்கோ’ என சொல்லி கொடுக்கும் கிளி பச்சை வண்ணம் கொண்ட பீப்பீ எனவும் சொல்லலாம்.
- தன் கதை இப்படியெல்லாம் வாசிக்கப்பட வேண்டுமென ஒரு எழுத்தாளர் முன்முடிவு செய்து எழுதுவாரென நான் நம்புவதில்லை. தன் கதையை வாசகர்கள் விரித்தெடுத்து எழுத்தாளரே எண்ணிப்பார்க்காத சாத்தியக்கூறுகளை வாசகர் கண்டடைந்தால் அது நல்ல எழுத்தென நான் நினைக்கிறேன். திருச்செந்தாழையின் கதைகள் அப்படி பல சாத்திக்கூறுகளை தரவல்லது. எங்கள் வாசகர்வட்டத்தில் பத்து பேர் அவர் கதையை விவாதித்தோம். பத்து விதவான வாசிப்புக்கோணங்கள் வெளிவந்தது. நான் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு கோணம் தென்படுகிறது. ஒரு அனுபவம் கிடைக்கிறது.
- எதற்கு ஒரு எழுத்தாளர் தேவையென பலமுறை யோசித்திருக்கிறேன். ஆழ்மனதில் தங்கியிருக்கும் ஏதோ ஓருணர்வுக்கு, சொல்லால் வடிவம் கொடுக்க முடியாமல் இருக்கும் வேளையில் எங்கிருந்தோ ஒரு எழுத்தாளர் கிளம்பி வந்து சொல்வடிவம் கொடுத்து சென்றுவிடுகிறார். அப்படி பல ஆழ்மன உணர்வுகளுக்கு இந்த புத்தகத்தில் வடிவம் கொடுத்திருக்கிறார் திருச்செந்தாழை.
- திருச்செந்தாழையின் கதைகளில் வரும் பெண்கள். நான் ஐந்து சித்திகள், ஆறு அத்தைகள் என பெண்கள் சூழ வளர்ந்தவன். அதனால் பெண்கள் உலகத்தில் அதுவும் அன்றாட குடும்ப சூழலில் நடக்கும் நுட்பங்களை கதைகளில் வாசிக்கும்போது என்னால் நெருக்கமாக உணரமுடிகிறது. கீறலின் வேலுமணி அத்தையில் என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு தினமணி டாக்கீஸ்கு ஓடிய சித்தி இருக்கிறார். ஆபரணத்தில் வரும் சித்திரையில், எங்களை புதுமண்டபதிற்கு அழைத்துச்சென்று கோனார் தமிழ் உரை வாங்கித்தந்து, திரும்பி வருகையில் மாடர்ன் ஹோட்டலில் கிளப்பு தோசை வாங்கி தந்த அத்தை கொஞ்சம் இருக்கிறார். டெவில் என அன்பாய் அதட்டும் வேர் கதையில் வரும் மகளில், கடவாய் பல்லில் முடியினும் மெலிதான கழுத்தில் தொங்கும் தங்க சங்கிலியை கடித்தபடி, வேகமாக ஓங்கி மெதுவாக தலையில் குட்டி குட்டி, இது கூட தெரியாதா fool என சொல்லி கணக்கு சொல்லிக்கொடுத்த விஜி மிஸ் இருக்கிறார்.
- அப்பாக்கள். இசைபோல், ஒளிபோல், தாழம்பூவின் வாசனைபோல், மதுரையின் வெயில்போல், இருக்கின்ற இடம் தெரியாமல் வாழ்வு முழுவதும் பூரணமாக நிறைந்திருக்கின்ற அப்பாக்கள் வரும் கதைகளை வாசிக்கையில் புத்தகத்தை அப்படியே அணைத்து எப்போது உறங்கினேனென்று தெரியாமல் உறங்கிருக்கிறேன்.
சிறுவயதில் ஒரு சீனி மிட்டாய் கிடைக்கும். கடித்து தின்றால் சீக்கிரம் தீர்ந்துவிடுமென்று நாக்கடியில் வைத்து கொஞ்ச கொஞ்சமாக கரைய வைத்து திண்பது பழக்கம். அதுபோல ஒவ்வொரு கதையும் அதை வாசித்த அனுபவத்தையும் அது கொடுத்த உணர்வுகளையும் புத்தகம் வாசித்து முடித்த இரண்டு மாதத்தில் கொஞ்ச கொஞ்சமாக அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன். மிட்டாய் கரைந்தபின்பும் எஞ்சும் இனிப்பாய் மொழி தித்திக்கறது. கதை இதைத்தான் சொல்கிறது என விளக்குவதைவிட எப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது, ஆழ்மனதிலருந்து எதையெல்லாம் வெளிக்கொண்டுவந்தது, இன்னும் ஆழமாக எதையெல்லாம் மனதில் புதைத்ததென எனக்குள் நடந்த உரையாடலை இங்கே குறித்துக்கொள்கிறேன். பைத்தியகாரன் பேசுவதுபோல் இருக்கலாம் அல்லது ஒரு வாசகன் பேசுவதுபோலும் இருக்கலாம்.இரண்டும் ஒன்றுதான் என்பான் நண்பன் ஒருவன். இருக்கட்டும். ஒன்றே என்னின் ஒன்றே ஆம்.
காப்பு.நினைவழிவது எப்படி சிக்கலோ, அதுபோல அதீத நினைவும் சிக்கல்தான். தாழம்பூ இக்கதையின் குறியீடு. உத்தரகோசமங்கையில் தொடங்கிய கதையானதால் எனக்கும் நெருக்கம்.கதை வாசிக்கையில் மயக்க நிலைக்குள் செல்வது போலத்தான் இருந்தது. நினைவழிவது ஒரு காப்பு என்றால், நினைவழிவதில் இருந்து தன்னை மீட்டுக்கொள்வதும் ஒரு காப்பு.
நட்சத்திரங்களை ருசிப்பவர்கள். மாயக்கம்பளம்தான். விளிம்புகளற்ற வீடுகளில் வாழும் பதட்டம் கதை முழுக்க இருந்தது. ஏதோ ஒரு நொடியில் நான் கம்பளத்திலிருந்து விழுந்துவிடுவேனோ என பயந்து பயந்து வாசித்தேன். இன்னும் சொல்லப்போனால் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கைப்பிடிகளை இறுகப்பற்றிக்கொண்டு வாசித்தேனென்றுதான் சொல்ல வேண்டும். நிலத்திலிருந்து எழும்பி மாயக்கம்பளத்தில் அமர்ந்து கீழே அங்குமிங்கும் ஓடும் மனிதர்களை காணும் பரந்த பார்வையாகட்டும், அந்தரத்தில் ஆடும் விளிம்பில்லாத மாயக்கம்பளத்தில் சிதறி ஓடும் உருண்ட பந்தாகட்டும், அதை ஒரு உறவுக்குள் வைத்துச்சொல்வதாகட்டும், எல்லாமே ஒரு மனநிலைதானோ என எண்ணிக்கொள்ளச் செய்கிறது.வாசிக்கும்போது நிலத்திற்கும் மாயக்கம்பளத்திற்கும் ஒரு நாளிலேயே மாறி மாறி தாவியுமிருக்கிறேன்.
வேர். இந்த தொகுப்பில் எனக்கு பிடித்த கதை. Master piece. எதிலோ தர்க்கத்திற்குள் சிக்காத ஒன்றிற்காக தன்னை முழுமையாய் இழக்கும் தந்தையை காணும் சிறுவனாக தொடங்கி, பின்பு தன்னை இழந்து, மனைவியை இழந்து, கடைசியில் கைகள் வேராக மாறி முடியை ஒதுக்கும் காட்சி வரை என செல்லும் கதையில் எத்தருணத்தில் என்னை இழந்தேனென்றால் ‘தனியாக இருப்பதை ‘ என தொடங்கும் வரிகளில்தான். டெவிலில் தொடங்கி லவ்லி வரை எத்தனை எத்தனை உணர்வுகளை கதை கடத்திச் செல்கிறது.எழுத்தாளரின் வரிகளிலேயே சொல்லலாமென்றால, ஆல் விழுந்த வீட்டில் நிறைமாத கர்பினியின் இடுப்பெலும்புகள் நெகிழ்ந்து வழிவிடுவதுபோல், கதை வாசிக்க வாசிக்க மனம் நெகிழ்ந்து ஆலமரமாக வளர வழிவிடுகிறது.
அவற்றின் கண்கள். உயிரற்ற பொருட்களின் இருப்பென்பது தனிமையில் உரத்து கேட்கும். இருவர் மட்டுமே வாழும் வீட்டில் ஒருவர் மரணமடையும்போது அவ்வீட்டின் பொருட்கள் அவ்விருவரின் வாழ்வின் முழு நினைவுகளையும் தாங்கி நிற்கின்றன.
நிழல் இழந்த முற்றம். வாசித்து மனம் நெகிழ்ந்துவிட்டது. ஆழ்மனதிலிருந்து எதையோ வெளியில் எடுத்து இன்னும் ஆழமாக மனதில் புதைத்த கதை. உண்மையில் ஆண்களுக்கு மனைவியின் அருமை இருக்கும்போது தெரிவதில்லை. பழைய வாக்கியம்தான். அப்படியே அருமை தெரிந்தாலும் அதை வெளிகாட்டிக்கொள்ள தெரிவதில்லை. இதுவும் பழைய வாக்கியம்தான். ஆனால், மனைவியை இழந்த ஆண் எல்லாவற்றிலும் தன் மனைவியை நிறைத்துக்கொள்ளதான் முயற்சி செய்வான். நிழலை இழந்த முற்றம் என சொல்வதைவிட , ஆசுவாசமாக விழுந்துக்கொண்டிருந்த முற்றத்தை இழந்த நிழல் என்றுதான் சொல்ல வேண்டும்.
விலாஸம். உயரப்பறந்து தரையில் வீழ்ந்த பறவையின் நிறம் பிஸ்தா. தாளப் பறந்து சிகரத்தில் அமர்ந்திருக்கும் பறவையின் நிறம் செர்ரி. இரண்டு கார்களை சொல்லும் ஒரு பத்தியில் தன்ராஜ் மற்றும் பெருமாள் நிலையை சொன்ன லாவகம். கதை அப்பாவின் கதைதான். ஆனால் அப்பா அதிகமாக பேசவேயில்லை கதையில். அவர் பேசிய சில சொற்களும் வியாபாரதிற்காக என்பதை வாசித்த முடித்தபின் எண்ணிப்பார்த்தால் எதிலும் ஒட்டாமல் வியாபராத்தில் மட்டுமே இருக்கும் அப்பாவின் கதையில் கூட அப்பா கதைக்குள் இருக்கும் எந்த கதாபாத்திரத்தோடும் பேசாமல் ஒட்டாமல் வியாபாரத்தில்தான் இருக்கிறார்.வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஓடும் அப்பா, புகழேந்தி போன்றவர்களின் வன்மத்தை காலில் போட்டு மதித்துதான் ஓடுகிறார். முதலாளியும், அவரைவிட பல மடங்கு உயர்ந்து நிற்கும் தொழிலாளிக்கும் இடையில், அங்கேயே தேங்கிவிட்ட ஒரு புகழேந்தியின் வன்மம் அப்போதே அனைந்த தீக்குச்சியின் புகைபோல் கந்தக வாடையை வீசியபடி கதை முழுக்க ஊர்ந்து செல்கிறது. புகழேந்தி கதாபாத்திரத்தை வைத்த இடம் திருச்செந்தாழையின் டச்.
ஆபரணம். பால் மணம். அதை தாங்கி நிற்கும் ஆபரணம்.அடைய முடியாத இடத்தில் இருக்கும் ஆபரணமும், அடைந்தபின் பொருளற்று போகும் ஆபரணமும் எப்போதும் வலிதான்.
கடைசியாக ஒன்று. என்னைப்போன்ற வாசகர்கள் மொழியில் கவிதைத்தன்மை அதிகம், உவமைகள் வாசிக்க வாசிக்க நிறைய வருகிறது, கதைகளில் முடிவுகள் தெளிவாகயில்லை என்றெல்லாம் சொல்லி திருச்செந்தாழையின் தனித்தன்மையை அழிக்க முயற்சிப்போம். என் ஒரே பயம், எழுத்தாளர் அதற்கு சிறிதும் இடமளித்துவிடக்கூடாது என்பதுதான்.இப்புத்தகத்தில் கதையும், கவித்துவமும், நுட்பமும், மொழியும் வடிவமைக்கப்படவில்லை. நிகழ்ந்திருக்கிறது. அப்படியே நிகழவிடுவதுதான் வாசகனுக்கு எழுத்தாளர் அளிக்கும் பரிசு.
எங்கள் வாசகர்வட்டம் வழியாக இந்த புத்தகம் எனக்கு வந்துசேர்ந்தது. இதோ இந்த கடைசி வரியை தட்டச்சு செய்யும் நேரத்தில், மின்விசிறி காற்றில் பேழைக்குள் சிறகடித்தபடி அமர்ந்திருக்கும் பறவைபோல் விஸாசம் சிரித்தபடி என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது.

Comments
Post a Comment