கவிதை, புரிந்துகொள்ளக்கூடியதா என்ன?
கவிதை, அப்போது குளிப்பாட்டி கொண்டு வந்த குழந்தைபோல் ஆடையின்றி என்முன் பற்களற்ற வாயினால் சிரிக்கிறது. என் கற்பனையை எல்லாம் விதவிதமான ஆடையாக்கி குழந்தைக்கு அணிவிக்கிறேன். கவிதை வாசிக்க அறிவைவிட கற்பனையே தேவை. பறவைமுன் , நிலவின்முன், மலரின்முன் , வாழ்வின்முன், போரின்முன், மரணத்தின்முன் நிற்கும் கவிஞர் ஒருவரின் அருகில் நின்றே நானும் அவர் கவிதையை வாசிக்கிறேன்.
அன்று ஒரு காலையில் பறவையின் பாடல் கேட்டு மரத்தடியில் அமர்ந்து 'Ode to Nightingale' எழுதினானே Keats, அப்போது அருகில் இருந்த இன்னொரு மரத்தில் ஊஞ்சல் கட்டி நான் ஆடிக்கொண்டிருந்தேன். ‘பெண் யார்?பெற்றுக்கொண்டால் மகள்.பெறாத வரையில் பிரகாசமான இருள்.’ என கவிஞன் பிரான்சிஸ் கிருபா எழுதுகையில் தீப்பற்றி எரிந்த அவன் மேஜை காகிதத்தை நீருற்றி தீயை அனைத்தபின் கவிதையை வாசித்ததும் நான்தான். ‘After every war someone has to clean up.Things won’t straighten themselves up, after all.’ என்ற Szymborska உடன் போரில் உடைந்த பாலத்தைக் கட்ட நானும் ஒற்றைக்கல்லை சுமந்தே அவள் வரிகளை வாசித்தேன்.
என் கவிதை வாசிப்பு முறையை மாற்றியமைத்த மிக முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ புத்தகம். இரண்டு ‘Dead poets society’ திரைப்படம்.கவிதை வாசிப்பில் , அதிலும் சங்க இலக்கிய கவிதை வாசிப்பில் சொல்மீது தீவிரமான கவனம் செலுத்தி வாசிக்க தூண்டுதலாய் அமைந்தது நாஞ்சில் நாடன் அவர்களின் ‘கம்பனின் அம்பராத்தூணி’ புத்தகம்.
கொரோனா. ஊரடங்கு. இந்த இருசொற்களை கடந்த இரண்டாண்டுகளில் உச்சரிக்காதவரில்லை. அப்படி ஒரு ஊரடங்கு நேரத்தில் புகைப்படக்கலை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதற்கு முன் புகைப்படங்கள் எடுத்திருந்தாலும் நல்ல ஆசானிடம் முறையாக கற்க வேண்டும் என்பது நீண்டநாள் அவா.
முதன்முதலில் DSLR காமெராவை என் 21 வயதில் ராஜா அண்ணன் வீட்டில்தான் பார்த்தேன். அதற்குமுன் DSLR காமெராவை நீ பார்த்த்தேயில்லையா என்றால், பார்த்திருக்கிறேன் ஆனால் வெறும் தொழில்நுட்ப கருவியாக மட்டுமே கல்யாண மற்றும் விசேஷ வீடுகளில் போட்டோகிராபர்கள் கையில் பார்த்திருக்கிறேன். அது எதுவும் நினைவில் இல்லை. ஆனால் அவர் வீட்டில் பார்த்தது நினைவில் தங்கியிருக்கிறது..அன்றிலிருந்து காமெராவை நான் அணுகும் கோணம் மாறிவிட்டது. இப்போது ஊரடங்கு காலத்தில் ஒரு நல்ல மென்டாரிடம்(mentor) சேர்த்து விட்டதும் ராஜா அண்ணன்தான்.
இன்று உற்ற நண்பனாக, ஒரு சதுரத்தில் மாயாஜாலங்கள் கற்றுத் தரும் மாயாவியாக, வண்ணங்கள் மூலம் வாழ்வை புது கோணத்தில் காட்டும் ஆசானாக, தோளில் தொங்கும்போது தூக்கத்தில் தோளில் தலைசாய்த்து உறங்கும் மகளாக, பேட்டரி தீர்ந்து வேலைச்செய்ய மறுக்கும்போது அடம்பிடிக்கும் மகனாக(ஏன் மகள்கள் அடம்பிடப்பதில்லையா? என்ற கேள்வி எழுந்தால்.. பெரும்பாலும் மகள்கள் தந்தையின் கஷ்டத்தை சீக்கிரம் உணர்ந்துக்கொள்கிறார்கள். மகன்கள் சிறிது காலம் தாழ்த்திதான் உணர்ந்துக்கொள்கிறார்கள் என தோன்றுகிறது), தூரத்தில் எங்கோ இருப்பதை அருகில் ஜீம் செய்து காட்டும்போது வருங்காலத்தை தன் அனுபவத்தால் அருகில் வரவழைத்து உரைக்கும் தந்தையாக, தனிமை தனிமை என்றைலைந்து களைத்து வீடு திரும்பும்போது உடனே அருகில் அமர்ந்து கை கோர்த்துக்கொள்ளும் மனைவியாக, ஒன்றுமேயில்லையோ என்று அஞ்சும் நேரத்தில் எல்லாமுமாக நானிருக்கிறேன் என்று மடியில் தலைக்கிடத்தி பாடும் தாயாகவும், என்னை நானே என்னுளிருந்து இந்த உலகத்தை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கும் மூன்றாம் கண்ணாக காமெரா இருக்கிறது.
மிக அழகான புகைப்படத்தை எடுப்பவன் ரசிகன். அனைத்து புகைப்பட தொழில்நுட்பங்களையும் பின்பற்றி புகைப்படம் எடுப்பவன் நல்ல தொழில்நுட்ப கலைஞன். ஒவ்வொரு புகைப்படத்தின்னுள்ளும் தன் கதையை, கற்பனையை, உயிரின் ஒரு துளியை ஒளித்து வைத்து பார்பவருக்கு கடத்துபவன் கலைஞன். இதுதான் நான் என் புகைப்படக்கலை ஆசான்களிடமில்லாம் கற்றுக்கொண்டது.
கடந்த சில ஆண்டுகளில் புகைப்படங்களை எடுக்கும்போது மனதில் நடந்த உரையாடல்களும், அவ்உரையாடல்களின் வழியே நினைவிற்கு வந்த வாசித்த கவிதைகளும் சிந்தனைகளும் பல. ஒரு பறவை, சிறு எறும்பு, இலையில் தேங்கி நிற்கும் மழைத்துளியின் முன் சிறிய உரையாடல். கடலென நிமிர்ந்து நிற்கும் மலை, பாலை என விரிந்து கிடக்கும் கடல் முன் நீண்ட உரையாடல் என பல.
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
…
…
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.
…. William Wordsworth
William Wordsworth , ஆங்கில ரொமான்டிசிஸ காலத்தின் முதன்மை கவிஞன். ஒரு மாலை நேரத்தில் தம் சகோதரியுடன் நடந்துக்கொண்டிருக்கையில் ஓர் அழகான ஏரிக்கரையில் ‘Daffodils’ மலர் கூட்டங்களைக் காண்கிறான். அத்தனை மலர் கூட்டங்களும் அவனைக்கண்டு மகிழ்ச்சியில் ஆடுவதாக அவனுக்கு தோன்றுகிறது. பின்பு தனிமையில் வீட்டில் அமர்ந்திருக்கும் போதில் தனிமையின் மோனத்தில் அவன் அக கண்களுக்கு நொடிப்பொழுதில் அத்தனை மலர்களும் நடனமாட அவன் நெஞ்சம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. எண்ணிப்பார்த்தால் தனிமைத்துயரை அனுபவிக்கும் எவர்க்கும், அத்துயரத்தை விரட்டியடிக்க இந்த கடைசி நான்கு வரிகள் போதாதா என்ன? தனிமை இன்னும் இன்னும் என அடங்காத தாகமென உள்ளுக்குள் பற்றி எரிகையில், இந்த நான்கு வரிகள் போதாதா அதை அனைக்க? தனிமை பனி. தொட்டால் கையை சுடும் பனி. எத்தனை முறை மலையுச்சியில் அதிகாலையில் மனிதர்களற்ற வேளையில் அங்கமர்ந்து பாடும் பறவையின் பாடலில் இந்த நான்கு வரிகளைக் கேட்டிருப்பேன். ஒவ்வொருமுறையும் தனிமையை இந்த வரிகள் விரட்டியடித்திருக்கிறது. அன்று ஒரு காலை. மெல்பர்ன் குளிர் குறைந்து மெல்ல வெயில் எட்டிப்பார்த்திருந்தது. நான் மதுரையில் வெயில் பருகி பிறந்து வளர்ந்தவன். அதனால் குளிர்காலம் பிடிப்பதில்லை. மனம் வெறுமையை உணர்ந்தபடியே வெயிலை நோக்கி இருந்த அந்த நாளில் மனம் போன போக்கில் மெல்பர்ன் தெருக்களில் நடந்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு வீட்டின் வேலியின் வெளியில் இந்த தெரு ஓர மலர் ஒன்று ஆடியது கண்ணில்பட்டது.
படமெடுக்குமுன் வேலிக்கு உள்ளே எட்டிப்பார்த்தேன். நன்றாக பராமரிக்கப்பட்ட தோட்டம். சரியான நேரத்தில் தண்ணீர், உரம் என பராமரிக்கப்பட்ட மலர் தோட்டம். தெருவில் மலர்ந்த மலர் உள்ளே மலர்ந்திருந்தால் அதற்கும் நல்ல கவனிப்பு கிடைத்திருக்கும். பின் நடக்கையில் ‘Daffodils’ இன் வரிகள் நினைவிற்கு வந்தது. Wild flowers vs Garden flowers என எண்ணிக்கொண்டே வந்தேன். எதுவாக இருப்பது சிறப்பு என எனக்குள் நானே வாதிட்டு வந்தேன். Daffodils கவிதையில் அதற்கான விடை கிடைத்தது. Wild flowers அவ்வழியே செல்லும் எவர் கண்ணுக்குள்ளும் விழுகிறது. அதை காண்பவன் கவிஞனாக இருந்தால் உலகத்தின் எவரின் தனிமையையும் விரட்டும் கவிதையாக உருமாறுகிறது.என்னைப் போன்றவனுக்கு உற்ற நண்பனாக மாறுகிறது. Wild flowers மீதெல்லாம் ஒரு பொறாமை பிறக்கிறது. இன்று தனிமையின் மோனத்தில் அமரும் போதெல்லாம் மெல்பர்ன் தெருக்களில் மலர்ந்த மலர்கள் Wordsworth -இன் Daffodils உடன் சேர்ந்து நடனமாடுகின்றன.
They flash upon that inward eye
Which is the bliss of solitude.
உண்மைதான். ஒரு மலர் ஒரு நோயை ஆற்றும் திறனுடனே மண்ணில் பிறக்கிறது.
Wild flowers , I envy you!

Comments
Post a Comment