எனக்கு ஹிந்தி தெரியாது. கற்றுக்கொள்ள பலமுறை முயன்றுள்ளேன். அத்தனை முறையும் தோல்வி. தோல்வியென்றால் சாதாரண தோல்வியல்ல படுதோல்வி. ஹிந்தி தெரியாமல் நான் பட்ட அவமானங்கள் சிறிதல்ல. இன்று நினைக்கும்போதில் அவையெல்லாம் நகைச்சுவையாக தெரிகின்றன.
பெங்களூரு இன்போசிஸ் வளாகம். உள்ளேயே ஒரு ஐசிஐசிஐ வங்கி கிளையுள்ளது. என்னுடைய அக்கவுண்டின் முகவரி மாற்ற கிளைக்கு நேரில் சென்றேன். அங்கே கவுண்டரில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார். மேஜைமேல் 'khayaal aapka ' என எழுதப்பட்ட ஒரு சிறு பலகை அவர் முன் இருந்தது. நான் அப்பொழுது தான் ஆஸ்திரேலியாவில் இருந்து பெங்களூரு திரும்பி இருந்தேன். அதனால் முதல் முறை சந்திப்பவரை கூட சார் என்றோ மேடம் என்றோ அழைக்காமல் பெயர் சொல்லி அழைக்கும் புது பழக்கத்தை பழகியிருந்தேன். நேராக அந்த இளம் பெண்ணிடம் சென்று , பலகையில் இருந்ததைப் படித்து, ‘ஹலோ Khayaal , ஹொவ் ஆர் யு?’ என்றேன். என்னை பார்த்து பார்த்து வெகு நேரம் சிரித்தாள். எதற்கு சிரிக்கிறாள் என புரியாமல் என் இடத்துக்கு வந்தபின்பு என் டீம் மேட்டிடம் விவரத்தை சொல்லி கேட்டேன். அவள் Khayaal விட அதிகமாக சிரித்து , 'Khayaal aapka' என்றால் பெயர் அல்ல . அது ஹிந்தியில் எழுதப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் விளம்பர ஸ்லோகன் என்று சொல்லி சிரித்தாள். (Khayaal aapka - Take care of you , credits - google translator)
மெல்பர்ன்னில் நண்பனுடன் ஒரு பாருக்கு சென்றிருந்தேன். பீர் வாங்க வரிசையில் நின்றிருந்தோம். எங்கள் முன் இருவர் நின்றிருந்தனர். இருவரும் இந்தியர்கள்தான். ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். நடுவில் நடுவில் எங்களை ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டே பேசியதைபோல் எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டுமே தோன்றியது. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள் கூட்டாளிகளில் ஒருவனுக்கு என்ன பீர் என மறந்துவிட்டதுபோல. இருவரும் வரிசையை விட்டு போகிற வேளையில் ,ஒருவன் என்னிடம் ஹிந்தியில் ஏதோ சொன்னான். பாரில் பாடல் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்ததால் சத்தமாக பேசினான்.எனக்கு சில வடஇந்தியர்களிடம் இதுதான் பிரச்சனை. ஒருவனுக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று அறிந்துகொள்ளாமலே இந்திய முக சாயல் இருந்தால் ஹிந்தி பேச தொடங்கிவிடுவார்கள். அன்று அவன் சத்தமாக பேசியது, எனக்கு ஹிந்தி தெரியுமா என கேட்காமலே என்னுடன் ஹிந்தி பேசியது, மற்றும் எனக்குள்ளிருந்த மூன்று 'asahi'கள் எல்லாம் சேர்ந்து சிறிது தன்னிலை மறந்து அவனிடம் தமிழில் '*$*$*, நீ போடா *%$%*. சும்மா சும்மா வந்து ஆத்தா ஹே ஓத்தா ஹேனு பேசிகிட்டு. போடா ***' என்று திட்டிவிட்டேன். அவனுடன் இருந்த இன்னொருவனுக்கு தமிழ் தெரிந்திருந்தது. "ஹலோ, நாங்க வரிசைல இருந்து போறோம். நீங்க முன்னாடி போங்கனு தான அவர் சொன்னாரு. அதுக்கு இவ்வளவு ரூடா பேசுறீங்க" என்றான். இந்த சம்பவம் நடந்து பத்து வருடங்கள் கழித்தும் அன்று ஹிந்தி தெரியாமல் நடந்து கொண்ட விதம் சிறுபிள்ளைத்தனமாகதான் தோன்றுகிறது.
ஹிந்திக்கும் எனக்குமான உறவு இப்படியிருக்க எனக்கு 'Noida'வில் ஒரு வேலை கிடைத்தது. கண்டிப்பாக அந்த வேலையில் சேரவேண்டிய சூழ்நிலை. நல்ல வேலை. எனக்கு பிடித்த டொமைன் மற்றும் டெக்னாலஜி. கம்பெனி தங்குவதற்கு ஆறு மாதம் கெஸ்ட் ஹவுஸ் கொடுத்து, இரண்டு மாதமொருமுறை விமான டிக்கெட் கொடுத்து மதுரைக்கு சென்று வர அனுமதிக்கும்.
மூட்டைகளை கட்டி கொண்டு டெல்லி விமானம் ஏறினேன். டெல்லி விமனநிலையத்திலிருந்து ஒரு டிரைவர் என்னை பிக்கப் செய்து கெஸ்ட் ஹவுசில் இறக்கிவிட்டார். கெஸ்ட் ஹவுஸ் என்பது இரண்டு 3 பெட்ரூம் வீடு கொண்ட ஒரு வளாகம். அனைத்து வசதியும் இருந்தது. ஒரு வாட்ச் மேன், இரண்டு சமையல்காரர்கள், ஒரு டிரைவர் மற்றும் ஒரு மேனேஜர். நான் தங்கியிருந்த நான்கு மாதங்களில் இரண்டு மாதம் வேறு எவரும் கெஸ்ட் ஹவுசில் தங்கியிருக்கவில்லை.
இரண்டு சமையல்காரர்களில் ஒருவன் பல்ராம். என் வயது தான் இருக்கும். பீஹாரி. அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு சுத்தமாக ஹிந்தி தெரியாது. அடுத்த நாள் என்ன சமைக்க வேண்டுமென்று இரவு வந்து கேட்பான். Dal, Rice, Roti, Paneer எல்லாம் எளிதாக சொல்லமுடிந்தது. ஒருநாள் வெண்டைக்காய் வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் வெண்டைக்காய் வரைந்து காட்டி சொன்னேன். வரைந்ததை வெண்டைக்காயாக அவன் சரியாய் புரிந்து கொள்ள வேண்டும் என்ற என் தத்தளிப்பை அவன் புரிந்துக்கொண்டான்.சிரித்துக்கொண்டே, ‘சார் , bhindi டீக் ஹை’ என்றான். bhindi-யா, என்னை பொட்டு வைத்துக்கொள்ள சொல்கிறானே என குழம்பினேன். அடுத்தநாள் சரியாக வெண்டைக்காய் செய்துக்கொண்டு வந்து தந்தான்.
பல்ராம் சமையலில் கில்லாடி.அவன் சமையலில் ஒரு குறையுமில்லை. அவனுக்கு நான் வைத்த பெயர் நளன். அப்படியொரு சமையல். சாப்பிட்டு முடித்தவுடன் என் தட்டை எடுக்கவிட மாட்டான். என் எச்சில் தட்டை மற்றவர் எடுப்பது தவறென்று எனக்கு சிறுவயதிலிருந்தே கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘உங்கள் தட்டை நீங்களே எடுத்தால் மேனேஜர் கோபிப்பார், என் வேலையே போய்விடும்’ என பல்ராம் சொன்னான். மேனேஜரிடம் போய் பேசினேன். ‘அதான் சம்பளம் கொடுக்கிறோமே , பண்ணட்டும் சார்’ என்றார் மேனேஜர். அதிர்ச்சியாக இருந்தது. அடுத்த நாளிலிருந்து பேப்பர் பிளேட் வாங்கி வந்து சாப்பிட்டேன். பல்ராம் எதுவும் பேசவில்லை.
இரவில் சில சமயம் வேலையிருக்கும். கேட்காமலே தேநீர் கொண்டுவந்து தருவான். இத்தனைக்கும் நாங்கள் பேசுவது பெரும்பாலும் சைகை மொழியில்தான் இருக்கும். சமையல்காரர்களுக்கோ, டிரைவர்களுக்கோ ஒரு மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. அதை அவன் பெரிதாக நினைத்ததாகக்கூட தோன்றவில்லை. இப்படி இரண்டு மாதங்கள் பல்ராமுடன் ஒரு நட்பு உருவாகியிருந்தது. ஏதாவது புது உணவு வேண்டுமென்றால் ஒரு YouTube வீடியோ கொடுத்தால் போதும். வீடியோ ஹிந்தியில் இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஒருமணி நேரம் காட்டாறு போல் வேலை செய்வான். அப்படியொரு சமையல் கலைஞன். பிறவிக் கலைஞன். நளன்.
இரண்டு மாதங்களுக்குப்பிறகு இன்னொரு நண்பர் வந்தார். வந்த இரண்டாவது நாள் அவருக்கும் பல்ராமுக்கும் பெரிய சண்டை. காலையில் பப்பாளி பழம் வேண்டுமென கேட்டிருக்கிறார். பல்ராம் மறந்துவிட்டான்.பல்ராமை மிக ஆக்ரோஷமாக திட்டினார். சமாதானப்படுத்த முயன்ற என்னை தலையிட வேண்டாமென கூறிவிட்டார். வசை பொறுக்க முடியாமல் பல்ராம் ஏதோ பதில் பேசினான். அடுத்த கணம் பல்ராமை அடிக்க பாய்ந்துவிட்டார். தடுத்தபின் அந்த நண்பர் என்னிடம், ‘அவர் சாதிப்பெயரைச்சொல்லி, நான் இந்த சாதிக்காரன். இவன் பீஹாரி, கீழ்சாதிக்காரன். இவன் என்னை எதிர்த்து பேசுகிறானா’ என்றார். நான் முன்னர் சாதிக்கொடுமைகளை பார்த்திருந்தாலும், அன்று சாதி ஒரு வெறி கொண்ட நாயென மற்றவர்மேல் ஏவப்படுவது கண்டு அதிர்ச்சியும் பயமும் வந்தது. ஒரு சொல் கூர்மையடைந்து எதிரில் இருப்பவனை குத்திக் கிழிக்கும் அவலத்தை மிக அருகில் கண்டது அன்றுதான்.
அன்றிரவு கெஸ்ட் ஹவுஸ் மேனேஜர் ஒரு விசாரணை நடத்தி என்ன நடந்தது என கேட்டறிந்தார். வசை பொறுக்காமல் பல்ராம் ஹிந்தியில் என்ன சொன்னான் என எனக்கு தெரியவில்லை. கண்டிப்பாக கடுஞ்சொல் பேசியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்தி தெரியாததால் என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் என்னிடம் இன்னொரு நண்பர் சாதி குறித்து பேசியதை சொன்னேன். அனைத்தையும் கேட்டு மேனேஜர் அமைதியாக சென்றுவிட்டார்.
அடுத்தநாள் பல்ராம் அறைக்கு வந்தான். தான் சில நாட்கள் லீவில் போவதாக சைகையில் சொல்லிச் சென்றுவிட்டான். அடுத்த ஒரு மாதம் என் வேலையும் மற்றும் பல அலுவல்களும் என்னை ஓட வைத்துவிட்டன. பல்ராமை கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். மறதி வரமா சாபமா என தெரியவில்லை.பின்பு சட்டென ஒருநாள் பல்ராம் திரும்பி வந்து சமையல் செய்ய ஆரம்பித்துவிட்டான். முன்புபோல் நட்பில்லாமல் ஒரு இடைவேளையுடனே பேசினான். அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா இல்லை அவனே இடைவெளி உருவாக்கிக்கொண்டானா தெரியவில்லை. சில இடங்களில் சிலவற்றை மாற்ற முடியாது. நானும் புரட்சியாளனல்ல. சரியென்று விட்டுவிட்டேன்.
ஒரு வாரம் கழித்து கெஸ்ட் ஹவுஸில் ஒரு விருந்து. வெளிநாட்டிலிருந்து Client வந்திருந்தார்கள். எனக்கும் அழைப்பிருந்தது. பல்ராம்தான் சமையல். எனக்கு என்ன வேண்டுமென்று கேட்டு அதைச் சமைத்து வைக்கிறேன் என்றான். சிக்கன் பெப்பர் ப்ரை செய்து வைக்கச்சொன்னேன்.
விருந்தன்று ஒரு production issue. P1 என்று சொல்லுவோம். Clientக்கு வருமான இழப்பை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்த மென்பொருள் பிரச்சனை. அதையெல்லாம் சரிசெய்து கெஸ்ட் ஹவுஸ் திரும்ப இரவு மூன்றுமணியாகி விட்டது. நான் அறைக்கு வந்த ஒரு பத்து நிமிடத்தில் பல்ராம் சூடான உணவு தட்டுடன் உள்ளே வந்தான். சிக்கன் பெப்பர் ப்ரையுடன். ஹிந்தியில் ஏதோ சொல்லி சென்றுவிட்டான். ஹிந்தி தெரியவில்லை.ஒரு சொல்லின் பொருளும் புரியவில்லை. ஹிந்தி தெரியாது என்றாலும் அவன் சொல்லிச்சென்ற அனைத்தும் எப்படியோ புரிந்துவிட்டிருந்தது எனக்கு.

Comments
Post a Comment