அல்லிசைப் புள்ளினங்கள் - 2 . I can’t find Bukowski.

 சம்பவம் 1.

இடம் : The paperback book shop , Bourke street, Melbourne.

நான் : Hey, how are ya?. I can’t find Bukowski, his books are not on shelves. Would you mind helping me find him?

புத்தகக்கடை உரிமையாளர்: பொதுவாக எழுத்தாளர்களை அவர்கள் பெயர்களின் அகர வரிசைப்படி செல்ப்களில் அடுக்குவோம். ஆனால் Bukowskiக்கு இங்கு தனி இடமுண்டு. இரண்டாவது வரிசையில் மேல்தட்டில் அவரின் புத்தகங்கள் உள்ளன.

சம்பவம் 2.
இடம் : The Leaf bookshop , Ashburton, Melbourne.

நான் :  Hey, how are ya? . I can’t find Bukowski, his books are not on shelves. Would you mind helping me find him?

புத்தகக்கடை உரிமையாளர்: Bukowski, oh!, he is fast selling. Bukowski புத்தகங்கள் சில வாரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும். Pre-order போட்டவர்களுக்கு புத்தகம் கொடுத்ததுப்போக சில புத்தகங்களே செல்ப்பில் எஞ்சும். உங்களுக்கு தேவையான புத்தகங்களை சொல்லுங்கள், ஆர்டர் போட்டு வரவழைக்கிறோம்.

சம்பவம் 3.
இடம் : Already read bookshop , Fitzroy north, Melbourne. பழைய புத்தகக்கடை.

நான் :  Hey, how are ya? . I can’t find Bukowski, his books are not on shelves. Would you mind helping me find him?

புத்தகக்கடை உரிமையாளர்: Bukowski-இன் புத்தகங்களை பழைய புத்தகக்கடையில் கண்டெடுப்பது கடினம். Bukowski புத்தகங்கள் வாசித்து முடித்தாலும், பழசாகி கிழியும் நிலைமைக்கு வந்தாலுமே எவரும் பூயுக்கின் புத்தகங்களை கைவிடுவதில்லை. அதனால் பூயுக்கை பழைய புத்தகக்கடையில் காண்பது அரிது.




எனக்கு பல (தறு)தலைகள் நண்பர்களாக உண்டு. அப்படி ஒரு பெரிய தலை கல்லூரி படிக்கும் காலத்தில் எப்பவும் என்னிடம் சொல்வது, ‘மச்சான்! கூட்டத்துல எறங்கு. தன்னால ஒன்னோட கண்ணு எவள தேடுதோ, அவதா மச்சான் உன் கிரஷ்சு’.

அவன் அன்று கூறியது கிரஷ்சை கண்டடைய உதவியதோ இல்லையோ, இன்று மனதிற்கு நெருக்கமான எழுத்தாளனை கண்டடைய உதவுகிறது. எப்போது புத்தகக்கடைக்கு சென்றாலும் ‘Bukowski’ புத்தகங்களைத்தான் கண்கள் முதலில் தேடுகின்றன. அப்படித்தேடி கண்ணில் படாத தருணத்தில் நடந்த உரையாடலே மேலுள்ளவை. எண்ணிப்பார்த்தால் அவர்கள் கூறிய காரணம் ஒவ்வொன்றும் எவ்வளவு பொருத்தமென்று தெரிகிறது.அதுவும் பழைய புத்தகக்கடையில் இருந்த பெண் கூறிய காரணம் மிக ஆழமானது. நானும் இன்றுவரை என்னிடமுள்ள Bukowski புத்தகங்களை எவருக்கும் கொடுத்ததில்லை. கொடுக்க வேண்டும் என்ற எண்ணமுமில்லை.

எப்போது Bukowski என்ற எழுத்தாளனைக் கண்டடைந்தேன் என எண்ணிப்பார்க்கிறேன். ஒரு ஐந்து வருடம் முன்பென நினைக்கிறேன். வேலையில் நிலைக்கொள்ளா தருணமது. Java கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். Java கற்றுக்கொள்வதென்பது சுலபமல்ல. நான் ஒன்றும் coding-இல் பெரிய பிஸ்தும்மல்ல. எனவே வேலையில் யாரைக்கண்டாலும் பயம். சரியாக deliver செய்ய முடியவில்லை என்ற குற்றவுணர்வு. தன்னம்பிக்கை குறைந்த காலகட்டமது.

தீடீரென ஒரு புத்தகக்கடையில் ‘subtle art of not giving a f*ck’ என்ற Mark Manson புத்தகம் கண்ணில்பட்டது. சரி இந்த புத்தகத்தை வாசித்து தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ளலாமென வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு கிழவனைப் பற்றி இருந்தது. அவன்தான் Bukowski. சரியென்று இணையத்தில் தேடினேன்.தேடியபொழுது Charles Bukowski எழுத்தில் நான் வாசித்த முதல் கவிதை

there's a bluebird in my heart that
wants to get out
but I'm too tough for him,
I say, stay in there, I'm not going
to let anybody see
you.
there's a bluebird in my heart that
wants to get out
but I pour whiskey on him and inhale
cigarette smoke
and the whores and the bartenders
and the grocery clerks
never know that
he's
in there.


இந்த கவிதை வாசித்தவுடன் தெளிவாக தெரிந்தது Bukowski எனக்கான எழுத்தாளனென்று. அன்றிலிருந்து எந்த பிரச்சனையாக இருந்தாலும்  Bukowski வாசிப்பேன். உடனே  விக்ரம் படத்தில் கமல் சொல்லும் வசனம்தான் மனதில் தோன்றும். ‘தா.. பாத்துக்கலாம்’.

Bukowski எனக்கு கொடுத்தது என்ன? Bukowski வாசித்ததால் என் சிந்தனையில் என்ன மாற்றங்கள் வந்தன எனவெல்லாம் சிந்தித்துத் தொகுத்துக் கொள்கிறேன். மூன்று சிந்தனை மாற்றங்கள் என் வாழ்வை மாற்றியமைத்தவை.

முதல் மாற்றம். IT துறையில் layoff என்பது சாதாரணம். வெளியில் இருப்பவர்களுக்கு நிறைய சம்பளம் வாங்குவது மட்டும் தெரியுமே தவிர பல கடினமான, வாழ்க்கையையே அழித்துவிடக்கூடிய முடிவுகள் வெறும் கான்பரன்ஸ் காலில், ஒரு தொலைபேசி அழைப்பில், ஒரு மின்னஞ்சலில் IT ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்பதும், தலைக்குமேல் ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கும்போது பிரோமோசன், ஆன்சைட், புது டெக்னாலஜி என அனைத்தையும் வெல்ல வேண்டிய கட்டாயத்துடன் ஒரு நெருக்கடியில் வாழும் மனநிலை IT ஊழியர்களுக்குண்டு என்பது பலருக்கு புரிவதில்லை.இருக்கட்டும் பரவாயில்லை. அப்படி என் அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளுக்குமுன் layoff நடந்தது. இரண்டு வாரத்திற்கொருமுறை  கொத்துக் கொத்தாக பத்திருபது பேர் வெளியேற்றப்பட்டனர். என் மேனெஜர்கள் முதலில் வெளியேற்றப்பட்டனர். எங்கள் முழு டீமையும் கலைத்துவிடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஒரு வரிசையில் பல ஆடுகள் நிற்க வைத்து அறுக்கப்படும்போது, அறுபடும் ஆட்டைவிட வேடிக்கை பார்க்கும் ஆடுகளுக்கே மனம் பதபதைக்கும். மூன்று மாத்த்தில் வெளியேறிவிடுவோம் என தெரியும். இரண்டு மூன்று வாரம் மிகுந்த மன உளைச்சல்.பயம். உடனே என் புத்தக அலமாரியில் இருந்து ‘post office’ எடுத்தேன். வாசித்தேன். ஒரு உத்வேகத்துல் வேறு வேலை தேட ஆரம்பித்து ஒரு மாதத்தில் வேறு வேலைக்கு ஆபர் வாங்கிவிட்டேன்.  ஒரு மாதம் அன்று. இன்று அப்படியொரு நிலை வந்தால் ஒரு வாரம் போதும். ஏனென்றால் இதுவரை ‘post office’ நாவலை மூன்றுமுறை வாசித்துவிட்டேன். Bukowski kindled fearless spirit in me.

இரண்டாவது மாற்றம். சிறுவயதிலிருந்தே பெரியவர்கள் மூத்தவர்கள் என்றால் எதிர்த்துப்பேசக் கூடாது , மரியாதைக் குறைவாக நடத்தக்கூடாது என சொல்லச் சொல்லக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அதனால் வயதில் மூத்தவர்கள் சொல்வது எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் இடம் வலம் இல்லாமல் ஒரு மையமாக தலையசைத்து வைத்துவிடுவேன். இது நல்ல பழக்கமில்லை, உன் கருத்தின் தனித்தன்மையை, அதை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்துவிடுகிறாய் என எனக்கு நெருக்கமானவர்கள் சுட்டி காட்டியிருக்கிறார்கள். பெரியவர்கள் மனம் புண்படக்கூடாது என செய்வதால் நான் நல்லவன் என நினைத்துக்கொண்டிருந்தேன். இதனால் பல சமயங்களில் சிலர் எல்லை மீறி அறிவுரை அல்லது கேள்விக் கேட்ட ஆரம்பித்து விடுவார்கள். உலக உருண்டையைவிட பெரிய தொப்பை உள்ளவர்கள் பிட்னஸ் குறித்து அறிவுரை கூறுவார்கள். எல்லார் கருத்தையும் மதிக்க வேண்டும் ஆனால் அபத்தமாக பேசுபவர்களை எல்லைக்கு வெளியே நிறுத்த வேண்டும் என்ற தைரியம் Bukowski வாசித்தபின்புதான் வந்தது. இன்று தொப்பையுடன் உள்ளவர்கள் நீ உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஓங்கி அவர்கள் தொப்பையில் ஒரு குத்து விடுகிறேன். இதனால் சில நண்பர்களை, உறவினர்களை இழக்கநேரிடுகிறது. உதிரும் இலைகள் நல்லதுதான். புது இலைகள் முளைக்க இடம் வாய்க்கிறது என கடக்க வேண்டியதுதான். Bukowski motivated me to express myself.

மூன்றாவது மாற்றம். என் பொருட்கள் , வாழ்க்கை, சிந்தனை என அனைத்தையும் குறைந்தப்பட்ச ஒழுங்கோடு வைத்துக்கொள்ள முயற்சிப்பேன். அது ஒரு கட்டத்தில் அழுத்த ஆரம்பித்தது. புத்தக அலமாரி கலைந்திருந்தால் என்ன?, ஒரு புத்தகம் வாசிக்க சுவாரஸ்யமாக இல்லையென்றால் அதை பாதியில் வாசிக்காமல் நிறுத்தினால் என்ன குறைந்துவிடும்?, கண்கண்ணாடியை அதன் பையில் வைக்காமல் வெளியில் வைத்தாலென்ன?ஒரு நாள் முதலில் தயிர்சாதம் சாப்பிட தோன்றினால் அதை உண்டு பின்பு ரசம் சாப்பிட்டால் உலகம் அழிந்துவிடுமா? என சில சிறுசிறு தருணங்களில் ஒழுங்கை கலைத்துப்போடுவது இறுக்கத்தைக் குறைக்கிறது. ஆனாலும் பின்பு ஒரு ஒழுங்கில்லையே என்ற குற்றவுணர்ச்சியும், நீ ஒழுங்காகயில்லை என்ற உலகத்தின் ஒழுக்கசீலர்களின் அறிவுரையும் வசையும் சில நேரங்களில் என்னை குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் Bukowski வாசித்தபின் இந்த குற்றவுணர்சி கரைந்துவிட்டது. ஒழுக்கசீலர்களின் அறிவுரைக்கு ‘f off’ தான். கலைத்துப்போட்டு வாழ்வது கலகம் அல்ல அது ஒரு கலை என கற்றுக்கொடுத்தது Bukowski. It is this cacophony that keeps me alive from being a man drowning in mundane daily routines.

Bukowski ஆங்கிலத்தில் எழுதியவன். அவன் மொழி மிக இலகுவானது.மொழிப்பெயர்ப்பு இல்லாமலே வாசிக்கலாம். என் அல்லிசைப் புள்ளினத்தில் ஒரு ராஜாளி Bukowski. வாழ்வு சிறிது. வாசிக்காமல் இருப்பதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால் ஒருவேளை ஒரு புத்தகத்தை மட்டுமாவது வாசிப்போம் என்று தோன்றி எவரேனும் என்னிடம் பரிந்துரைக் கேட்டால், go find Bukowski. Dot.

Comments