காலை ஆறு மணி இருக்கும். மெல்பர்னின் குளிர்காலம். பனி பொழிவதில்லை என்றாலும் எலும்பை உருக்கிடும் குளிர்ந்த காற்று வீசும் காலம். Ferntree gully சாலையிலிருந்து சிக்னலில் வலதுபுறம் திரும்ப நின்றுக்கொண்டிருந்தேன். குளிர்காலம் என்பதால் இன்னும் சூரியன் உதித்திருக்கவில்லை. எதிரில் 'Dandenong' மலை. சட்டென்று பார்க்கையில் இருட்டில் ஒரு பெருங்களிறு படுத்திருப்பது போல் ஒரு காட்சி. உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. மனம் விளையாடும் பல மாய விளையாட்டுகளில் இதுவும் ஒன்றென்றெண்ணி மலை ஏற ஆரம்பித்தேன். காரில் பாட்டை எல்லாம் நிறுத்திவிட்டு ஜன்னலை சிறிது இறக்கிவிட்டு மெதுவாக ஏறிக்கொண்டிருந்தேன். மலை ஏற ஏற என்னையறியாமல் கண்களில் நீர் நிரம்பி நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.நூறுமுறைக்கு மேல் இந்த மலையை ஏறியிருக்கிறோம் ஆனால் இன்று ஏன் கண்களில் நீர் வழிந்தோடுகிறதென்று எவ்வளவு யோசித்தும் தெரியவில்லை. மனம் பூத்து மலர்ந்த நாளது. இப்படி காரணமறியாமல் மனம் இன்புற்றிருந்து பல வருடங்கள் இருக்கும். ஒரு மணிநேரம் மலையேறி பின்பு ஓர் இடத்தில் நிறுத்தி இறங்கி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்களில் நீர் நின்றபாடில்லை. சட்டென்று மகிழ்ச்சியின் காரணம் புரிந்தது. ஆம், யானைமேல் ஏறி விட்டேன் என்ற உணர்வே அது. மலையை யானையாக பார்க்கும் மனதை அளித்தது சங்க இலக்கிய பாடல்கள். யானைப்பாகன் சங்கச்சித்திரங்கள் எழுதிய ஜெ. யானைமேல் ஏற்றிவிட்டது நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தகமும், மனோஜ் குரூரும் , கே.வி.ஜெயஶ்ரீயும்.
இன்னொரு நாள் என் மென்பொருள் code-ஐ 'performance tune' செய்து கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக வேலை பார்த்தும் ஒன்றும் கிழிக்க முடியவில்லை. அன்று காலை எட்டு மணியிலிருந்து முயற்சி செய்து கொண்டிருந்தேன்.சோர்வு தட்டவே பதினோரு மணிவாக்கில் கொஞ்சம் இடைவெளி எடுக்கலாமென எண்ணி 'brighton beach' செல்வோம் என கிளம்பினேன். கடற்கரைக்கு செல்லும் சாலை இருபுறமும் மரங்கள் நிறைந்து இருக்கும். இலையுதிர் காலம் அப்போது தான் முடிந்திருந்த படியால் மரங்கள் இலைகள் இல்லாமல் இருந்தது. ஒரு மரம் பல கிளைகளுடன் நின்றிருந்தது. என் அம்மாவுடன் பிறந்த சித்திகள் ஐவர். சட்டென அந்நொடியில் அம்மரத்தை பார்த்ததும் நடுக்கிளை என் அம்மாவாகவும், பிறக்கிளைகள் என் சித்திகள் போலவும் ஒரு காட்சி தோன்றியது. உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. மனம் விளையாடும் பல மாய விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அத்தனை கிளைகளும் சேர்ந்துதான் எங்களை எல்லாம் வளர்த்தது. மரத்தடியில் சில நொடிகள் நின்றிருந்தேன். குழந்தையாக இருந்தபோது அவர்கள் மடியில் தோளில் உறங்கியதுபோன்ற உணர்வு. மரத்தை, இயற்கையை அம்மாவாக பார்க்கும் மனதை அருளியது சங்க இலக்கிய பாடல்கள். அம்மரத்தில் வாசிக்கும் காலம்தோறும் ஊஞ்சல் கட்டி ஆட்டுவித்தது நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தகமும், மனோஜ் குரூரும் , கே.வி.ஜெயஶ்ரீயும்.
என் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு 'cemetry' உண்டு. அதன் அருகில் ஒரு 'thirsty camel' கடையும் உண்டு. இரவு நேரத்தில் அந்த பக்கம் போவதை தவிர்த்தாலும், இரவு பதினோரு மணிவரை திறந்திருக்கும் ஒரே கடை அதுதான். வேறுவழி இல்லையே. போகும் போது தனியாக போனாலும் திரும்பி வரும்போது 'asahi' என்ற மாவீரனுடன் வருவோமே என போய்விடுவேன். என் நேரம், பத்துக்கு ஒன்பது முறை 'cemetry-ஐ' கடக்கும் போதெல்லாம் நான் பார்த்த 'conjuring' படமும் அந்த 'nun'-னும் நிற்பது போலவே தோன்றும். சூனா பானா போய்கிட்டேடட... இரு என வேகமாக கடந்து விடுவேன்.பிறகொரு நாள் சமூக வலைத்தளத்தில் ஒரு மோட்டிவேஷன் வாசகம் படித்தேன் 'face your fears'. இருந்தாலும் நான் ஒன்னும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் கிடையாது. இரவு பன்னிரண்டு மணிக்கு வேண்டாமென்று பகல் பன்னிரண்டு மணிக்கு cemetry-க்கு போனேன். இறந்த மனிதர்கள் கற்களாக நின்றுகொண்டிருந்தார்கள்.காரில் அமர்ந்துகொண்டே பத்து நிமிடம் பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். சட்டென்று வாசித்த ஒரு திருக்குறள் நினைவில் தட்டியது. உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. மனம் விளையாடும் பல மாய விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அத்தனை பேரும் வாழ்வின் முன்நின்று கல்நின்றவர்கள் என்று தோன்றியது. வாழ்வை, அனுபவங்களை, இறப்பை என அத்தனையும் புது கோணத்தில் பார்க்கும் மனதை அளித்தது வள்ளுவர். ஒவ்வொரு சங்க தமிழ் புலவன்முன்னும் என்னை கல்லாய் நிற்க வைத்தது நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தகமும், மனோஜ் குரூரும் , கே.வி.ஜெயஶ்ரீயும்.
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்.
(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:771)
பொழிப்பு (மு வரதராசன்): பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.
உலக இலக்கியங்களில் சில மொழியாக்கங்களையும், மொழிபெயர்பாளர்களையும் வாசித்திருக்கிறேன். என் வாசிப்பின் மிகச்சிறிய எல்லைக்குட்பட்டு என்னால் சில நூல்களை சிறந்த மொழியாக்கமென உறுதியாக சொல்ல முடியும். Robert Fagles-இன் Iliad, Edith grossman-இன் Don Quixote, Richard P and Larissa V இணைந்து மொழிபெயர்த்த ரஷ்ய நாவல்கள் எல்லாம் வாசிக்கும்போது அவை சிறந்தது என உணர்ந்திருக்கிறேன். வாசிப்பவன் மொழிபெயர்ப்பென்றே உணராமல் வாசிக்க முடிந்தால் அதுவே சிறந்த மொழிபெயர்ப்பு. அவ்வரிசையில் முதலாவதாக நிலம் பூத்து மலர்ந்த நாள் புத்தகத்தை வைக்கிறேன்.
இப்புத்தகத்தை வாசிக்கும்போதில் சங்ககால தமிழ் நிலம், அந்நிலத்தின் மலர்கள், விலங்குகள், கூத்துகள், பலவகை குடிகளான பரதவர், எயினர், பாணர், உழவர், அவர்களின் வாழ்வியல் முறை என அறிந்துக்கொள்ள முடிந்து மனம் மகிழ்ந்தது. சித்திரையின் இரண்டாம் எழுத்தில் சங்க இலக்கியபாடலில் சொல்லப்பட்டுள்ள காதல், தலைவி, தோழி, பசலை என புரிந்துக்கொள்ளமுடிந்தது. மனதை நெருடிய கேள்விகளும் பல எழுந்தன. பரத்தையரிடம் செல்லும் கணவனை பொறுத்துக்கொள்ளும், கணவன் இறந்தபிறகு உடன்இறக்க எண்ணும் என பெண்களின் நிலை பல கேள்விகளை எழுப்பியது. வீரமென்ற பெயரில் போர் ஏற்கமுடியாத ஒன்றாக இருந்தது. சமகாலத்தில் நடந்த, நடந்துக்கொண்டிருக்கின்ற போர்களின் அழிவை கண்டதால் வந்த மனநிலை என்றே நினைக்கிறேன். எப்படியிருந்தும் தமிழ் நிலத்தின் முன்னோடிகளின் மேன்மைகளை கண்டு நெஞ்சிலடித்து அதீதமாக கொண்டாடும் மனநிலையுமில்லை, அதேசமயம் கீழ்மைகளை கண்டு அவர்கள் வாழ்க்கை தவறானது என்று தீர்பெழுதும் மனநிலையுமில்லை. அவர்களின் வாழ்வை அப்படியே புரிந்துக்கொள்ள முயற்சித்தே புத்தகத்தை வாசித்தேன். இப்புத்தகத்தின் ஏற்க முடியாத, கேள்விகள் நிரம்பிய பகுதிகளை அப்படிதான் கடந்தேன்.
நானும் புத்தகங்களை வாசிக்கிறேன். பல புத்தகங்களை வெளியில் நின்று ஒரு வாசகனாக வாசிக்கிறேன். குமரித்துறைவி, காடோடி, The idiot போன்ற சில புத்தகங்கள் என்னை அதனுள் ஒரு கதாபாத்திரமாக, உயிருள்ள மனிதனாகவே உள்ளிழுத்துக்கொள்கிறது. நிலம் பூத்து மலர்ந்த நாளும் என்னை புத்தகத்தினுள் ஒரு கதாபாத்திரமாகவே நடமாட வைத்துவிட்டது. அப்படி புத்தகத்தினுள் வாழ்ந்த அனுபவமே என் வாசிப்பனுபவம்.
*****
அன்று நான் பரணருடன் குகையில் தான் இருந்தேன். இளமையில் போர்க்களத்தில் வீரர்களின் அம்பறாத்தூணியில் அம்புகளை நிரப்பும் வேலை எனது.இப்போது சிறு முதிர்வினால் அம்புகளின் கனம் தாங்காமல் வேறு வேலை செய்யலாமென்று என் அரசனிடம் சென்று கோரிக்கை வைத்தேன். அவர்தான் என்னை பரணருடன் இருக்குமாறு ஆணையிட்டு அனுப்பிவைத்தார். பரணர் சொல்ல சொல்ல பனை ஓலையில் பாடலை எழுதுவது தான் என் வேலை. அப்படி எழுதிய பாடல்களை ஒரு பெட்டியில் வைத்து சுமந்து பரணருடன் பயணம் செய்ய வேண்டும். எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை அம்புகளை விட இப்பெரும் புலவர்களின் பாடல்கள் கனமானதென்று.உடல் சுமக்கும் கனத்தைவிட மனம் சுமக்கும் கனம் எடை கூடியது என தெரிந்திருந்தால் நான் இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டேன்.
தன் பாடலை விளக்கும் போதில் சித்திரையையும், சிந்தனையும் கணவன் மனைவியாக உதாரணம் காட்டினார் பரணர். புலவரே இத்தனை ஆண்களும் பெண்களும் இருக்க, இவ்விருவர் எதற்கு என வினவினேன். "காதலை கண்களில் கண்டு கணிக்காத கவிஞன் உண்டோ?" என்றார். உண்மைதான் காதல் மட்டுமல்ல, மொழியும், சொல்லும், தமிழும் என அத்தனையும் கவிஞர்களுக்கு சொல் பேச்சு கேட்கும் ஒரு குழந்தை தான் போலும். எப்போது அழைத்தாலும் மடியில் ஏறி அமர்ந்துக் கொள்கிறது.
அடுத்தநாள் மலைமேல் உள்ள கொற்றவையை வணங்க பாணர் கூட்டத்தை பரணர் அழைத்துச் சென்றார். பாணர்கள் விடைபெற்று சென்றபின் என்னை அழைத்து அவர்களுடன் பின்செல்லுமாறு பனித்தார். நான் சென்றுவிட்டால் உங்கள் பாடலை யார் எழுதுவதென்று கேட்டேன். நீ பாடலை சுமக்கும் கருவிதான், உன் வேலை இங்கு முடிந்து விட்டது. இப்பெருமழையில் உன் சிறுஇசையை கரைத்துவிட்டாய். இனி மற்றொரு இசையாய் பிறக்கும் காலம் உனக்கு வாய்த்திருக்கிறது. நீ சிறுவயதில் உன் அன்னையிடம் கேட்ட கேள்விகளை சீரை என்ற சிறுமி உள்வளர்த்து வருகிறாள். அவள் உன் மகள். அன்னையிடம் பெற்றதை மகளிடம் கொடுத்துவிடு. கடத்துவதும் கருவியின் கடமைதான் என்றார். மற்றொரு இசையாய் பிறப்பாய் என வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
பாணர்களை தொடர்ந்த பயணம் கொடிது. புறத்தில் தமிழ் நிலத்தின் இயற்கை அழகு.ஆனால் கண்முன்னே பசி, வறுமையென தன் உடலை சுமந்து நடக்கும் பாணர் கூட்டம். புறத்தில் நான் ஆறு, வயல், மலை என கடந்துக்கொண்டிருந்தேன். அகத்தில் நீரின்று இறந்த ஒரு விலங்கின் எலும்பு மண்ணாக தகிக்கும் பாலையை கடக்க முடியாமல் திணறினேன். பாணர் கூட்டத்தில் யாரும் நான் பின்தொடர்வதை கவனிக்கவில்லை.
தீடிரென்று ஓரிரவு சீரை என்னைத்தேடி வந்தாள். என்னை எப்படி கண்டுகொண்டாயென்றேன்? நான் பேசும் நட்சத்திரங்களுடன் நீயும் பேசிக்கொண்டிருந்தாய். அதோ விண்ணில் மின்னும் அந்நட்சத்திரமே உன்னிடம் என்னை அழைத்து வந்தது என்றாள். காலையில் அப்பா சொன்னார் வானத்திற்கு வண்ணமில்லையென. உன் வானத்திற்கும் வண்ணமில்லையா? என கேட்டாள். வானத்திற்கு வண்ணம் உண்டு சிறுமி. அவரவர் வானத்தின் வண்ணத்தை அவரவர் தேர்ந்தெடுக்க வேண்டும். என் வானத்தின் வண்ணம் நீலம். நீலம் ஆழத்தின் வண்ணம். அறியமுடியாமையின் வண்ணம் என்றேன். என் வானத்தின் வண்ணமும் நீலமென்றாள்.
சிறிது சிந்தித்தவள், ஆனால் அனைவருக்கும் அவரவர் வானத்தின் வண்ணத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளதா என்று கேட்டாள்? ஆமாமென்றேன். அப்படியென்றால் என் தோழிகளின் வானம் மஞ்சள் நிறம். பசியின் நிறம். அதை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லையே என்று கேட்டாள். உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது. அன்னையிடம் பெற்றதை மகளுக்கு அளித்துவிடு என்றுதானே சொல்லி பரணர் என்னை அனுப்பினார். இம்மகளிடம் இக்கணத்தில் பெற்றதை எங்கு எவரிடத்தில திருப்பி அளிக்க முடியும். பெற்றுக்கொள்வதே என் ஊழா? மனதின் பாலை சுட்டெரிக்க கண் சிவந்து சீரையை பார்த்துக்கொண்டிருந்தேன். சீரை நீலமாகமாறி இருட்டில் கரைந்துபோய்விட்டாள். சீரை நீலம் தான்.அறிய முடியாதவள், ஆழமானவள்.
சீரைமூலம் அவர்கள் பறம்புமலைக்கு செல்கிறார்கள் என் அறிந்துக்கொண்டேன்.எனக்கு கபிலரை தெரியும். அவருடைய பனை ஓலை தனித்துவமானது. அவர் சொல்லச்சொல்ல சில பாடல்களை எழுதியிருக்கிறேன். அவரிடம் சென்று இவர்களுக்கு உதவுமாறு கோர கிளம்பினேன்.
அன்று கபிலரின் வீட்டில் என்னை கொலும்பன் பார்த்துவிட்டார். எவர் கண்களிலும் படக்கூடாதென்று உறுதியாக இருந்தேன். அவர் என்னை நெருங்குமுன் கூட்டத்தில் கலந்து மறைந்துவிட்டேன். பாணர்களின் கெட்ட நேரம் நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது. அன்று படைவீரர்கள் உதவியுடன் அவர்கள் மலை இறங்கிய இரவில் ஒரு குகையில் அமர்ந்திருந்தேன். சீரையின் தாய் பாடிய கணவனின் இறப்பிற்குபின் மனைவி உடன்கட்டை ஏறும் பாடலைக்கேட்டு மனம் வெதும்பியிருந்தேன். சீரை எப்போது வந்தாளென தெரியவில்லை. ஆனால் அவளைக்கண்டதும் உள்ளத்தில் ஓரு கருணை. பாவம், பெண்களாகிய நீங்கள். கற்பு என்ற கைவிலங்கு என தொடங்குவதற்குள், நீ பரிதாபப்படும் நிலையில் நாங்களில்லை. எனக்கு கற்பென்றால் உனக்கு வீரம் ஒரு கைவிலங்கில்லையா? உன்னால் ஒருதுளி கண்ணீரை சிந்தமுடியவில்லைதானே. நாம் சந்தித்த முதல்நாள் மனம் கொந்தளிக்க, கண்களில் திரண்ட கண்ணீரை நிறுத்தி, கண்கள் சிவக்க என்னை பார்த்தாயே. ஆண் கண்ணீர் சிந்தக்கூடாது அது வீரமில்லை என்றுதானே. அன்றே ஒரு துளி கண்ணீரை நீ மண்ணில் சிந்தியிருந்தால் உன் பயணம் முடிந்திருக்கும். பெருமழையில் சிறு இசையாய் கரைந்திருக்கலாம்.
பாணர்கள் ஓரிடத்தில் தங்கியபின் நானும் அங்கேயே சில நாட்கள் தங்கினேன். ஆனால் எனக்கு தெரிந்த போர்வீரன் மகீரன் அந்த ஊருக்கு வந்தபோது அவ்விடத்தைவிட்டு உடனே கிளம்பிவிட்டேன். மகீரனால் நான் பல இடர்களை முன்னர் சந்தித்திருக்கிறேன்.
நேராக கிளம்பி கடற்கரை ஊருக்கு செல்ல முடிவுசெய்தேன். கடற்கரைக்கு செல்வது கொட்டித்தீர்ப்பதற்கு. முசிறி சென்று அங்கு வாழ்ந்தேன். அப்போதுதான் என் வாழ்வில் நான் வெறுக்கும் மயிலனை கண்டேன். மயிலன் சிறுவயதிலிருந்தே என் நண்பன். அறிவைத்தேடி அவன் அலைய ஆரம்பித்ததும் எனக்கும் அவனுக்கும் விவாதங்கள் தோன்றியது. மன்னன் நன்னனுக்கு அறிவென்ற பெயரில் தவறான அறிவுரை வழங்கினான். நீதி அனைவருக்கும் ஒன்றே என்றான். உயிர் பறிக்கும் நீதி அநீதி என்றேன். என்னை புறங்கையால் தட்டிவிட்டு கடந்துச்சென்றான். அறிவு அறிவு என தேடிக்கொண்டிருந்தான். உண்மையில் உன் தேடல் அறிவல்ல செல்வமே என ஒருநாள் அவனிடம் கேட்டேன். பேசவில்லை அவன். அவன் மனதை என்னைவிட ஒருவர் அறிய முடியாது. ஒடுங்கிவிட்டான். ஆனால் அரசனிடம் அதிகாரத்திடம் நெருக்கமாக வேண்டுமென்ற அவன் வேட்கை அவனை எரித்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் மகீரனின் நட்பும் வாய்த்தது. கூடா நட்பு என ஆரம்பத்திலேயே எச்சரித்தேன். கேட்கவில்லை. அவன் என் சொல்லைக் கேட்டிருந்தால் நான் அவனை பிரிந்திருக்க மாட்டேனே. எதிர்பாராமல் தன் உறவினர்கே இடர் அளித்தான். தன் தந்தையின் மரணத்திற்கு தானே காரணமானான். அவன் அறிவு அவனுடைய அழிவிற்கு வித்தாகுமென தெரிந்த அன்றே அவனைவிட்டு நான் பிரிந்து வந்துவிட்டேன்.
அன்றிரவு கடற்கரையில் அமர்ந்திருக்கையில் சீரை வந்தாள். கண்ணீர் சிந்துகிறாயா என்றாள்.கண்கள் சிவக்க அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
எங்கள் வாழ்வில் என்னவெல்லாமோ நடத்துவிட்டது. எங்களை பகடையாக பயன்படுத்திக்கொண்டது யார்? என கேட்டாள்.
சீரை, நீ சிறுமி. ஆட்டத்தின் சுவாரஸ்யமே தன்னை யார் ஆட்டுவிப்பதென தெரியாமல் இருப்பதுதான். தன்னை யாரும் ஆட்டுவிக்கவில்லை என நம்புவதும் ஆட்டத்தின் ஒரு கட்டம்தான். ஆடத்தானே இங்கு வந்தோம். ஆட்டுவிப்பவனை பற்றி ஏன் எண்ணவேண்டும். நம் ஆட்டத்தை ஆடிவிட்டு செல்வோம்.
சட்டென்று, "அண்ணா, உனக்கு மயிலனை தெரியுமா?" என்றாள்.
"அண்ணாவா? ஏன் என்னை தீடீரென்று அண்ணா என்றழைக்கிறாய் ?" என பதறினேன்.
கடலுக்குள் அழைத்துச்சென்று நீரில் என் முகம் காட்டினாள். நான் வெறுத்த மயிலனின் முகம் நீரில் தெரிந்தது.
அண்ணா, மயிலனின் எண்ணக்குவியல் நீ. அவன் அறிவு நீ. உன்னைக் கொன்றால் தான் அவனை மீட்கமுடியும் என கையில் உள்ள வாள் எடுத்து, என் வானத்தின் வண்ணம் சிவப்பாக மாறியிருந்தது.
*****
வறுமையில் வாடும் நாய் தன் குட்டிகளுக்கு பால் குடுக்க முடியால் இருக்கும் நிலையை இப்புத்தகத்தில் "உள்ளத்தின் கனிவை முலைகளுக்கு கடத்த முடியாமல் அது முனகியபடி கிடந்தது" என்று எழுதப்பட்டிருக்கிறது. இன்று இவ்வரிகளை எழுதும் குளிர்ந்த நடுநிசியில் பரணருடன், கபிலருடன் , அவ்வையுடன் தீமூட்டி அவர்கள் சொல்ல சொல்ல பாடலை எழுதிக்கொண்டிருக்கிறேன். மனம், பாடல் கொடுத்த மகிழ்ச்சியில், பரிசல் வாங்கி வாழும் இவர்களின் இயலாமையை எண்ணுகையில்,அரசர்களின் நியாய தர்மங்களை ஏற்க முடியாமல் கொந்தளிக்கையில், பாவப்பட்ட எளிய பாணர்களின் வாழ்வை எண்ணி எண்ணி கண்களில் நீர் கொட்ட மழையில் ஆடிக்கொண்டிருக்கிறேன். மனதின் நெகிழ்ச்சியை சொற்களில் மாற்ற தெரியாமல் தடுமாறி முனகியபடி கிடக்கிறேன்.இவர்களுக்கு திருப்பி என்ன செய்வது என்று அறியாமல் சிறுவயதில் கற்றுக்கொண்ட இசையை மீட்ட யாழ் எடுக்கிறேன். நடை பழகும் குழந்தை போல் தட்டி தடுமாறி வாசிக்கிறேன். என் சிறு இசை இப்பெருமழையில் கரையும் என தெரிந்தே.


Comments
Post a Comment